News

Friday, 15 October 2021 07:23 PM , by: R. Balakrishnan

Allow Green Firecrackers

பட்டாசுகளை அனுமதிக்கக் கோரி 4 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) கடிதம் எழுதியுள்ளார். டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, ஒடிஷா மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

தடை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிலில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே பட்டாசுகளை வெடிக்க பல மாநில அரசுகள் தடை விதித்து வருகின்றன.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கர்நாடகா, ராஜஸ்தான், ஒடிசா, டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதால் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் (Crackers) தேக்கமடைந்தன. இந்த ஆண்டும் கொரோனா காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டது. தீபாவளி (Deepavali) பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளின் விற்பனை செய்யும் முயற்சியில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பட்டாசு விற்பனை

டெல்லி அரசு 2022ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதே போல ராஜஸ்தான் மாநிலத்தின் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை மாநிலத்தில் பட்டாசு உள்ளிட்ட வெடிபொருள்களை வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஒடிசா, ஹரியானாவிலும் பட்டாசுகளை விற்பனை செய்யவும் வெடிக்கவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளன.

பட்டாசு வெடிக்கும் நேரத்தை தளர்த்த கோரி தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு கடந்த சில வாரங்களுக்கு முன்பு உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவகாசியில் 5 லட்சம் குடும்பங்கள் பட்டாசு தொழிலை நம்பி இருப்பதாகவும் உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றியே பசுமைப் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாகவும் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதம் செய்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தடை செய்யப்பட்ட பேரியம் உப்பை ஏன் பட்டாசு தொழிற்சாலைகளின் கிடங்கில் வைத்திருக்க வேண்டும்? என கேள்வி எழுப்பினர். பின்னர், பட்டாசு கட்டுப்பாடு தொடர்பான உத்தரவுகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், தீபாவளி கொண்டாட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் இல்லை என தெரிவித்தனர். தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த இடைக்கால மனுக்கள் மீதான விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

மேலும் படிக்க

வருகை தரப்போகிறது சூரிய சக்தியால் இயங்கும் மின்சார கார்கள்

இந்திய விமானப்படை தினம்: வீரர்கள் சாகசம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)