நகர்புற உள்ளாட்சி அமைப்புகள்- பெருநகர சென்னை மாநகராட்சி-தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், துணை மேயர், மன்ற உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க அரசாணை பெறப்பட்டுள்ள நிலையில் அதனை நடைமுறைப்படுத்த சென்னை மாநகராட்சி மன்றம் அனுமதி அளித்துள்ளது.
மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள், தாங்கள் முழுநேர மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளதால், தங்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையினை பரிசீலித்த தமிழக முதல்வர் மதிப்பூதியம் வழங்குவதற்கான அறிவிப்பினை அண்மையில் அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பிற்கு இணங்க நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்கள், துணை மேயர்கள், மன்றத் தலைவர்கள், மன்றத் துணைத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் பின்வருமாறு மதிப்பூதியங்களை வழங்கலாம் என முடிவு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சி (மாதம் ஒன்றிற்கு மதிப்பூதியம்) வழங்கப்படும் தொகையின் விவரம் பின்வருமாறு-
- மேயர்- ரூ 30,000-(ரூபாய் முப்பதாயிரம்)
- துணை மேயர்- ரூ.15,000, (ரூபாய் பதினைந்தாயிரம்)
- மாமன்ற உறுப்பினர்- ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம்)
2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் மதிப்பூதியம் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஆணையர் பெருநகர சென்னை மாநகராட்சியினை கேட்டுக் கொண்டார். அந்தவகையில் மதிப்பூதியம் வழங்குவது தொடர்பான அரசாணையினை நடைமுறைப்படுத்த மாநகராட்சி மன்றத்தின் அனுமதி வேண்டி கோரிக்கை சமர்பிக்கப்பட்டது. அனுமதி வேண்டி கோரப்பட்ட மனுவில் குறிப்பிட்ட முக்கிய தகவல்கள் பின்வருமாறு-
- ஒவ்வொரு மாதமும் முறையே மதிப்பூதியமாக வழங்கப்படும் செலவினத்தை மேற்கொள்ள “Honorarium for Councillors” என்று பிரத்யோகமாக ஒரு கணக்கு தலைப்பு ஏற்படுத்த நிதி ஆலோசகரை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தலைப்பின் கீழ் இச்செலவினத்தை மேற்கொள்வதற்கு ஏதுவாக 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் (ரூ.20,25,000 × 9) = ரூ.1,82,25,000/-ஐ ஒதுக்கீடு செய்ய நிதி ஆலோசகரை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் மேற்படி செலவினத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்ய ஆணை வேண்டியும், மாண்புமிகு மேயர், மதிப்பிற்குரிய துணை மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பதவியிலிருக்கும் வரையில் அவர்களுக்கு மேற்குறிப்பிட்ட மதிப்பூதியத்தினை வழங்கவும் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இதனைப் போல் அரசாணையில் குறிப்பிட்டுள்ள மதிப்பூதியத்தினை 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக RTGS வழியாக வரவு வைக்கவும், ஒவ்வொரு மாதமும் மேற்படி மதிப்பூதியத்தினை மாதத்தின் கடைசி வேலை நாளன்று உறுப்பினர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கவும் அனுமதி கோரப்பட்டது.
அரசாணையினை நடைமுறைப்படுத்த அனுமதி வேண்டி மன்றத்தின் முன் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இதற்கு மன்றம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இனி ஒவ்வொரு மாதமும் மேற்குறிப்பிட்ட மதிப்பூதியத்தை மாமன்ற உறுப்பினர்கள் பெறுவார்கள்.
மேலும் காண்க: