11 ஆம் வகுப்பு பயிலும் மாணவி சூரிய சக்தியில் இயங்கும் விவசாய வாகனமான 'SO-APT' ஐ உருவாக்கியுள்ளார். மேலும் விதைகளை விதைக்கவும், வயல்களுக்கு நீர்ப்பாசனம் செய்வது உட்பட பிற விவசாய பணிகளையும் மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அமித்தி இன்டர்நேஷனல் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார் மாணவி சுஹானி சௌஹான். புதுமையாக யோசிக்கும் ஆற்றல் கொண்ட மாணவி, ‘SO-APT’ என்ற சூரிய சக்தியில் இயங்கும் விவசாய வாகனத்தை வடிவமைத்து உருவாக்கியுள்ளார். இவற்றில் கார்பன் உமிழ்வு என்பது பூஜ்ஜியம். இந்த வாகனத்தினை பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் உற்பத்தி செலவைக் கணிசமாகக் குறைத்து பயிர் விளைச்சலை அதிகரிப்பதன் வாயிலாக விவசாயிகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தான் உருவாக்கிய வாகனத்தை மே 11 முதல் மே 14 வரை பிரகதி மைதானத்தில் நடைபெற்ற தேசிய தொழில்நுட்ப வாரம்-2023 ல் காட்சிப்படுத்தினார். அதனை பார்வையிட்ட அறிஞர்கள், விவசாயிகள், கல்வியாளர்கள் பலரும் சுஹானிக்கு பாராட்டினை தெரிவித்தனர்.
சூரிய ஆற்றல் ஏன்?
நாட்டில் சுமார் 85 சதவீத விவசாயிகள் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், சுஹானி சவுகானின் வாகன உருவாக்கம் விவசாயிகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது. வாகனமானது அதன் மேல் பொருத்தப்பட்ட சூரிய ஒளி மின்னழுத்த பேனல்கள் மூலம் இயக்கப்படுகிறது. சூரிய ஒளியினை மின் ஆற்றலாக மாற்றி வாகனம் இயக்கப்படுகிறது. இயற்கை ஆற்றலை பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் நுகர்வு தேவையை நீக்குகிறது.
வாகனத்தின் சிறப்பம்சம் என்ன?
SO-APT வாகனத்தை பயன்படுத்தி விதை விதைத்தல், நீர்ப்பாசனம் மற்றும் வரப்பு தோண்டுதல் போன்ற பல்வேறு விவசாயப் பணிகளை மேற்கொள்ள இயலும். வாகனத்தின் வடிவமைப்பு மற்ற வாகனங்களுடன் ஒப்பிடுகையில் சிறியதாக இருப்பதால் வேண்டிய விவசாயத் தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றி இயக்க இயலும்.
பேட்டரியானது ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 60 கிலோமீட்டர் தூரம் வரை இயக்கலாம் மேலும் 400 கிலோகிராம் வரை சுமைகளை சுமந்து செல்லும் தன்மையும் கொண்டது. கூடுதலாக, வாகனத்தினை வேண்டிய வேகத்தில் இயக்கவும் இயலும்.
பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள்:
சுஹானி சௌஹானின் சூரிய சக்தியில் இயங்கும் விவசாய வாகனத்தை பராமரிப்பதற்கு குறைந்த செலவை ஆகும் என்பதால் இது விவசாயிகளுக்கு நீண்ட கால பலன்களையும் வழங்குகிறது.
சூரிய சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம், வாகனத்தின் தினசரி இயக்கச் செலவு கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகி, விவசாயிகளின் நிதிச் சுமையைக் குறைக்கிறது. மேலும், குறைவான நகரும் பாகங்களைக் கொண்ட வாகனத்தின் எளிமையான வடிவமைப்பு பராமரிப்புச் செலவைக் குறைத்து, அதன் நீண்ட ஆயுளை உறுதி செய்கிறது. ஐந்து முதல் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் பேட்டரியை மாற்ற வேண்டிய நிலை வரும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள SO-APT வாகனத்தை சந்தைக்கு கொண்டு வரும் முயற்சியில் சுஹானி சௌஹான் தீவிரமாக இயங்கி வருகிறார்.
pic courtesy: india Today
மேலும் காண்க:
ஜல்லிகட்டு வழக்கில் தீர்ப்பு- பீட்டாவை லெப்ட் ரைட் வாங்கிய உச்சநீதிமன்றம்