நடப்பாண்டு வேளாண் நிதி நிலை அறிக்கையில் அமைச்சர் தெரிவித்த அறிவிப்பின் படி ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு வேளாண் விஞ்ஞானியை பொறுப்பு அலுவலராக நியமிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை தொடர்பான அனைத்து தகவல்களையும், விஞ்ஞான ரீதியிலான ஆலோசனைகளையும் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு நேரடியாக வழங்குவதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அருகாமையில் உள்ள வேளாண் கல்லூரிகள், வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் அறிவியல் நிலையங்களிலிருந்து ஒரு வேளாண் விஞ்ஞானியை ஒவ்வொரு வட்டாரத்திற்கும் பொறுப்பு அலுவலராக பணியமர்த்துவதற்கு அனுமதி வழங்கி அரசின் சார்பில் ஆணை வெளியாகியுள்ளது.
இதில் வட்டார வேளாண் விஞ்ஞானிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-
- ஒவ்வொரு வட்டாரத்திற்கும் நியமிக்கப்படும் வேளாண் விஞ்ஞானி அந்த வட்டாரத்தில் பெய்யும் மழை, மண்ணின் தன்மை, பயிர் சாகுபடி, சென்ற ஆண்டில் பூச்சி, நோய் தாக்கிய விவரம், ஒவ்வொரு பயிரிலும் கிடைக்கும் மகசூல், தற்போதுள்ள விற்பனை வாய்ப்பு, விவசாயிகளுக்கு கிடைக்கும் வருமானம், வட்டார அளவில் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டமைப்பு வசதிகள் போன்ற அடிப்படைப் புள்ளிவிவரங்களை சேகரித்து, அந்த வட்டாரத்தில் இலாபம் தரும் வகையில் மாற்றுப்பயிர்களை உள்ளடக்கி, பயிர் சாகுபடித் திட்டம் ஒன்றை விரிவாக்க அலுவலர்களுடன் இணைந்து தயாரித்து அதற்கேற்ப விவசாயிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
- வேளாண்மை, தோட்டக்கலைப் பயிர்களில் புதிதாக வெளியிடப்பட்ட உயர்மகசூல் இரகங்களைப்பற்றி விவசாயிகளிடம் விளக்கி, புதிய இரகங்களைப் பிரபலப்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு, இத்தகைய இரகங்களின் விதைகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- டிரோன்கள் மூலம் பயிர் பாதுகாப்பு, நிழல்வலைக்குடில், பசுமைக்குடில் போன்ற பாதுகாக்கப்பட்ட வேளாண் சாகுபடி, வேளாண்மை இயந்திரமயமாக்கல், மண்வள மேம்பாடு, ஒவ்வொரு விளைபொருளிலும் மதிப்புக் கூட்டி விற்பனை செய்தல் ஆகிய இனங்களில் நவீனத் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு பயிற்சி மூலமாகவும் செயல் விளக்கங்கள் மூலமாகவும் செய்து காண்பிக்க வேண்டும்.
- வட்டார அளவில் நடைபெறும் விவசாயிகள் பயிற்சி மற்றும் ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொண்டு, அவ்வப்போது எழும் களப் பிரச்சினைகளுக்கு தொழில்நுட்ப ரீதியாகத் தீர்வு காண விரிவாக்க அலுவலர்களுக்கு உதவ வேண்டும்.
- வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தவாறு, கிராமங்களில் உள்ள விவசாயிகளை உள்ளடக்கி உருவாக்கப்படும் Whatsapp குழுவில் வட்டார வேளாண் விஞ்ஞானியும் இணைந்து கொண்டு தொழில் நுட்ப ஆலோசனைகளை அவ்வப்போது வழங்க வேண்டும்.
- வட்டாரத்தின் எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில், சாகுபடி செய்யப்படும் வேளாண்மை, தோட்டக்கலைப் பயிர்களில் பூச்சி, நோய் தாக்குதல் அல்லது நுண்ணூட்டச் சத்து குறைபாட்டினாலோ பயிர் பாதிப்பு ஏற்பட்டால், விரிவாக்க அலுவலர்களுடன் இணைந்து, சம்பந்தப்பட்ட கிராமங்களுக்குச் சென்று பயிரை ஆய்வு செய்து, அதற்உ தொழில்நுட்ப ரீதியாக ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
- மாநில அளவில் வேறு ஏதாவது வட்டாரத்தில் புதிய பூச்சி, நோய்த்தாக்குதல்கள் ஏதும் ஏற்பட்டால், அதை முன்கூட்டியே அறிந்து, அத்தாக்குதல் அவர்களுக்குரிய வட்டாரத்தில் ஏற்படா வண்ணம் வட்டார அலுவலர்களையும் விவசாயிகளையும் எச்சரிப்பதோடு தடுபு நடவடிக்கைகளையும் பரிந்துரைக்க வேண்டும்.
- ஒவ்வொரு வேளாண்மை, தோட்டக்கலை விளைபொருட்களிலும் அறுவடைக்குப் பின் மேற்கொள்ள வேண்டிய தரம் பிரித்தல், மதிப்புக் கூட்டுதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து அவ்விளை பொருட்களுக்கு இலாபகரமான விலை கிடைக்கும் வகையில் உரிய சந்தை வாய்ப்பினையும் உருவாக்கித் தருவதற்கு உதவ வேண்டும்.
- வட்டார ஆய்வின் அடிப்படையில் கிடைத்த விவரங்களின் படி விவசாயிகளின் முக்கிய தொழில்நுட்பத் தேவைகளைப் பட்டியலிட்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவித்து அவற்றை ஆராய்ச்சியில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
டிரைவர் இல்லாமல் இயங்கும் டிராக்டர்- அசத்திய தெலுங்கானா பல்கலைக்கழகம்