யானைகள் சாதாரணமாக நடப்பது மூலமாக மட்டுமின்றி, ஒருவித ஒலியை எழுப்புவதன் மூலமும் அவற்றின் வருகையை முன்னரே அறிந்துகொள்ள முடியுமென்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
நிலநடுக்கத்தை அறிவதற்கு பயன்படுத்தப்படும் அமைப்புமுறையை கொண்டே யானைகளின் வருகையையும் கண்டறியலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்க அலைகள் எனப்படும் சீஸ்மிக் அலைகள் எவ்வாறு தரையின் வழியே ஓரிடத்திற்கு வருவதை, அது சுமார் நான்கு மைல்கள் தூரத்தில் இருக்கும்போதே கண்டறிய முடியுமென்பதை அவர்கள் அப்போது விளக்கினர்.
அடர்ந்த காடுகளிலுள்ள யானைகள் நடப்பதன் மூலமும், ஒலியின் மூலமும் வெளிப்படுத்திய அதிர்வுகளை ஜியோபோன் (geophones) என்ற உபகரணத்தை கொண்டு அளவிட்டனர்.
ஓரிடத்தின் நிலையான புவியியல் தகவல்களையும், நிலநடுக்க அலைகளை கண்டறியும் கருவியுடன் இணைக்கப்பட்ட மென்பொருளில் பதிவாகும் கணினி சார்ந்த கணக்கீடுகள் வழியாக யானைகள் வெளிப்படுத்தும் அதிர்வுகள் குறித்த துல்லியமான விவரங்களை கண்டறிய முடியுமென்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
யானைகளின் அதிர்வுகளை பதிவுசெய்யும்போது அவற்றின் செயல்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டு, பின்பு வெகுதூரத்தில் அமைக்கப்பட்டிருந்த கருவியில் பதிவான அலைகளுடன் ஒத்திசைவு செய்து அது யானையின் செயல்பாடுதான் என்பதை உறுதி செய்தனர்.
மேலும், மணலின் தன்மையும், தரைப்பகுதியில் நிலவும் மற்ற ஒலியும் வெகுதூரத்திலிருந்து யானையின் நடமாட்டத்தை அறிவதற்கு தடையாக உள்ளதாகவும், பாறைகளின் வழியே அலைகள் பரவுவதைவிட மணற்பாங்கான இடங்களின் வழியாக அதிர்வுகள் அதிக தூரத்துக்கு பயணிப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த அமைப்புமுறையின் மூலம் யானைகள் வெகுதொலைவில் இருந்தாலும், அவை என்ன செய்துக்கொண்டிருக்கின்றன, ஏதாவது ஆபத்து நிகழ வாய்ப்புள்ளதா என்பது குறித்து முன்னரே தெரிந்துகொள்ள முடியும்.
இந்த ஆராய்ச்சி முடிவுகள் 'கரண்ட் பயாலஜி' (Current Biology) என்ற சஞ்சிகையில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் பதிப்பிக்கப்பட்டது.
"யானைகள் இயற்கையாக எழுப்பும் அதிர்வுகளை புரிந்துகொள்ளும் பயணத்தில் இந்த ஆராய்ச்சி முடிவுகள் புதிய சாத்தியங்களை கண்டறிந்துள்ளது" என்று சேவ் தி எலிபெண்ட்ஸ் என்ற யானைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைமை செயலதிகாரி இந்த ஆராய்ச்சி குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.