தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருவதால், கோடையில் கால்நடைகளுக்கு தினமும் குறைந்தபட்சம் 5 முறை குடிக்க உகந்த நீர் வழங்க வேண்டும்,''என, தேனி கால்நடை நோய் புலனாய்வு உதவி இயக்குனர் கணபதி மாறன் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக தேனி சுற்றவட்டாரப் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட பின்னர் அவர் கூறியதாவது,
-
கால்நடைகளுக்கு கோடையில் ஒருநாளைக்கு 5 முறைகுடிக்க உகந்த நீர் வழங்க வேண்டும்.
-
கறவை மாடுகளுக்கு எப்போதும் தண்ணீர் கிடைக்க வசதி செய்ய வேண்டும்.
-
உப்பு கட்டிகளை மாட்டு கொட்டகைகளில் தொங்க விடுவதால் கால்நடைகள் தண்ணீர் பருகும் தன்மை அதிகரிக்கும்.
-
குளிர்ந்த நீரினை நீர் தெளிப்பான் மூலம் கால்நடைகள் மீது தெளிக்கலாம்.
-
மின்விசிறி அமைத்து வெப்ப அயர்ச்சியை தவிர்க்கலாம்.
-
கொட்டகை மீதும் நீர் தெளிப்பான் அமைத்து தண்ணீர் தெளிக்கலாம்.
-
குளிர்ச்சியாக வைப்பதால் பால் உற்பத்தி அதிகரிக்கும்.
-
செம்மறியாடுகளில் உடல் ரோமம் அதிகம் இருப்பதால் வெப்ப அயர்ச்சியால் ஏற்படும் விளைவுகள் அதிகம் இருக்கும்.
-
ஆடுகளுக்கு தேவையான சோடியம், பொட்டாசியம் சத்து தாது உப்பு கட்டிகளை கட்டி தொங்கவிடுவதன் மூலம் அளிக்கலாம்.
-
ஒரு ஆடு 8 முதல் 12 லி. நீர்அருந்தும்.இக் காலங்களில் மேய்ச்சல் பகுதியில் சுத்தமான தண்ணீர் வழங்க வேண்டும்.
-
கோழிகளுக்கு தண்ணீரில் வைட்டமின் சி 10 மி.கி., வீதம் கொடுக்கலாம். அயர்ச்சியை நீக்கும் பி காம்ப்ளக்ஸ், குளுகோஸ் வழங்கலாம் என்றார்.
தீவன தட்டுப்பாடு - அடிமாடாக போகும் கால்நடைகள்
கடந்த சில ஆண்டுகளாக, தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் போதிய மழையின்றி விவசாயம் பொய்த்துள்ளது. இதனால், விவசாயத்துக்கு மாற்று தொழிலாக கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். இதில் பெரும்பாலான விவசாயிகள், கால்நடைகளை அருகே உள்ள மேய்ச்சல் நிலம் மற்றும் வனப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
வறட்சியால் தீவன தட்டுப்பாடு
தற்போது போதிய மழையின்றி, விவசாய நிலங்களிலும், வனப்பகுதிகளிலும் செடிகள் காய்ந்து சருகாகி, கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வைக்கோல்களை, பாலக்கோடு, காரிமங்கலத்தில் விற்பனை செய்கின்றனர்.
வைக்கோல்களை மானிய விலையில் வழங்க கோரிக்கை
ஒரு ரோல் வைக்கோல் அதிகபட்சமாக, 500 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதை விலைக்கொடுத்து வாங்க முடியாத விவசாயிகள், தங்கள் கால்நடைகளை அடிமாடுகளாக, இடைத்தரர்கள் மூலம் கேரளா, கர்நாடகா மாநிலத்துக்கு விற்பனை செய்து வருகின்றனர். கால்நடை விவசாயிகளை பாதுகாக்க, மானிய விலையில் வைக்கோல் வழங்க வேண்டும் என, விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.