மக்கள்தொகை ஏற்றத்திற்கு ஏற்ப நீர்நிலை ஆக்கிரமிப்பு, கழிவுநீர் கலத்தல், பிளாஸ்டிக் போன்ற இதர கழிவுகளை நீர்நிலைகளில் விடுதல், சமூகத்தின் சுய பொறுப்பின்மை போன்ற பல்வேறு காரணங்களால் தொடர்ச்சியாக நீர்நிலைகள் பாதிப்படைந்தும், காணாமல் போகும் அவலமும் இன்றளவும் தொடர் கதையாக நீடித்து வருகிறது என்பது கவலைக்குரிய விஷயம்.
இப்படியொரு சூழ்நிலையில் நீர் நிலைகளை பாதுகாக்க தனிநபர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறார்கள். அவர்களை கெளரவிக்கும் விதமாக தமிழக அரசின் சார்பில் விருதும், ரொக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. இதுத்தொடர்பாக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-
மாண்புமிகு முதலமைச்சரின் நீர்நிலைப் பாதுகாவலர் விருது:
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழலையும் சூழல் அமைப்புகளையும் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இச்சூழல் அமைப்புகளுக்கு மூலாதாரமாக விளங்குவது நீர் நிலைகளாகும். எனவே, இச்சூழல் அமைப்புகளைப் பாதுகாத்துப் பேணிடவும், மாநிலத்தின் நீர் வளத்தைப் பெருக்கிடவும் அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர் நிலைகளைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் செயல்பாட்டாளர்களான பொதுமக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகளைப் போற்றி கவுரவிக்கவும், நீர் நிலைகளைப் பாதுக்கத்திட வேண்டும் என்ற எண்ணத்தை மக்களிடையே விதைத்திடவும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒருவர் என 38 பேருக்கு "மாண்புமிகு முதலமைச்சரின் நீர்நிலைப் பாதுகாவலர்" விருதும், ரூ. 1 இலட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இந்த ஆண்டிற்கான விருதுகள் விரைவில் வழங்கப்படவுள்ளன. எனவே, இந்த விருதிற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் "தமிழ்நாடு விருதுகள் (TN Awards)" (http://awards.tn.gov.in) வலைதளம் மூலம் 02.01.2025 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 17.01.2025 ஆகும்.
வழிகாட்டு நெறிமுறைகள்:
இவ்விருது குறித்த விரிவான நெறிமுறைகள் வழிகாட்டு http://www.environment.tn.gov.in/ , https://tnclimatechangemission.in/home/ வலைதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்கக்கூடிய நபர்கள் எந்த மாவட்டத்தில் அதிகபட்ச பணிகளை செயல்படுத்தியுள்ளனரோ, அம்மாவட்டத்தினைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க முடியாது. அவ்வாறு விண்ணப்பிக்கப்படும் பட்சத்தில், ஒரு மாவட்டத்தின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். ”தமிழ்நாடு விருதுகள் (TN Awards)" (http://awards.tn.gov.in) மூலம் சமர்ப்பிக்கப்பட்ட இணையவழி விண்ணப்பங்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். தேர்வுக் குழுவினரின் முடிவே இறுதியானது.
இவ்விருது குறித்த மேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
இயக்குநர்,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, எண்1, ஜீனிஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை 600 015, தொலைபேசி எண்: 044 – 24336421. வலைத்தளம்: tnclimatechangemission@gmail.com, http://www.environment.tn.gov.in/ , https://tnclimatechangemission.in/
Read more:
மருந்தாளுநர் டூ முழு நேர இயற்கை விவசாயம்: பல பயிர் சாகுபடியில் அசத்தும் கென்னடி
நெற்பயிருக்கான உரம் டூ கால்நடை தீவனம்: அசோலாவின் தன்மை என்ன?