நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு விரைவில் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காணொலிக் காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
புயலில் சிக்கிய தமிழ்நாடு
அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, அண்மையில் தமிழகத்தை நிவர் மற்றும் புரெவி என இரண்டு புயல்கள் தாக்கி, டெல்டா மாவட்ட பகுதிகள் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில், கனமழை பொழிந்த காரணத்தால் வேளாண் பெருமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூர், நாகப்பட்டினம் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் மிகக் கனமழை ஏற்பட்டதால் வயல்களில் நீர் நிரம்பி பயிர்கள் பாதிப்படைந்ததை நேரில் ஆய்வு செய்தபோது, விவசாயிகள் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை விடுத்தனர்.
நீலகிரி தேயிலை தொழிலாளர்களுக்கு ரூ.13.88 கோடி மானியம்!
விரைவில் இழப்பீடு
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இழப்பீட்டை ஆய்வு செய்யும் பணி வேளாண் துறை மூலமாக மாண்புமிகு அம்மாவின் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வயல்களிலுள்ள வெள்ளநீர் வடிந்தால்தான், சேதாரங்களை சரியான முறையில் கணக்கிட முடியும். விவசாயிகளின் வங்கிக் கணக்கு ஆகியவையும் பெறப்பட்டு, 4 தினங்களுக்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு ஆய்வறிக்கை விரைவில் அரசுக்கு தாக்கல் செய்யப்படுமென்று வேளாண் துறை செயலாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். எனவே, கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை அரசால் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
உருமாறிய கொரோனா
தற்போது இங்கிலாந்தில் பரவி வரும் புதுவிதமான கொரோனா நோய்த் தொற்று தமிழ்நாட்டிற்கு பரவி வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதுவரை கண்டறியப்பட்டுள்ள 13 நபர்களுக்கும் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு புனேவிற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த பரிசோதனை முடிவுகள் வந்த பிறகுதான் உருமாறிய வைரஸ் தொற்று உள்ளதா எனக் கண்டறிந்து அதற்கேற்றவாறு சிகிச்சை அளிக்க முடியும்.
முகக்கவசம் மட்டுமே தீர்வு
இந்நோய்த் தொற்றுப் பரவலை தடுப்பதற்கான ஒரே வழி முகக்கவசம் அணிவதுதான் என அரசால் வலியுறுத்திச் சொல்லப்பட்டு வருகிறது. இந்நோய்த் தொற்று குறைந்து வருவதால், பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை தவிர்த்து வருகிறார்கள். எனவே, அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டுமென்று அருள்கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன். இந்த உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றும் முகக்கவசம் அணியாத காரணத்தால்தான் ஏற்படுகிறதென்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றையெல்லாம் பொதுமக்கள் கவனமாக எடுத்துக்கொண்டு, அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
தமிழகத்தில் நோய்த் தொற்று 5.84 சதவிகிதமாக உள்ளது. சிகிச்சையில் இருப்போர் 8,947 நபர்கள், இறப்பு 1.48 விகிதமாக உள்ளது, குணமானவர்களின் 7,93,154 நபர்கள். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் நோய் சிகிச்சை குறித்த நிலையான வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டுமென்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
தைப் பொங்கலுக்கு ரூ.2500/-
நிவர் மற்றும் புரெவி புயல் / கனமழையில், சென்னையில் உள்ள அனைத்து ஏழை, எளிய மக்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று சுடச்சுட, சுவையான உணவு 8 நாட்களுக்கு மூன்று வேளையும் வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று, நிவர் மற்றும் புரெவி புயலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். டாக்டர் ரங்கராஜன் கமிட்டி அளித்த ஆலோசனைகள் அடிப்படையில் வருகிற தைப்பொங்கலை அனைத்து இல்லங்களிலும் சிறப்பாகக் கொண்டாட, சுமார் 2.06 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2,500/- ரூபாய் ரொக்கம் மற்றும் முழுக்கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படுமென்ற அறிவிப்பு கொடுக்கப்பட்டு அந்தப் பணி ஜனவரி 4ஆம் தேதியிலிருந்து தொடங்கவிருக்கிறது. இத்திட்டத்தை நான் ஏற்கனவே தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்துவிட்டேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
வாழை, மூங்கில், பூச்செடிகள் உற்பத்திக்காக ரூ.50 லட்சத்தில் திசு வளர்ப்பு மையம்!