Ban Online Games
ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது, ஒழுங்குபடுத்துவது தொடர்பாக கருத்துகளை தெரிவிக்க விரும்புவோர், homesec@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் வரும் 12ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என, தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலர் தெரிவித்துள்ளார். அவரது செய்திக் குறிப்பு: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது, ஒழுங்குபடுத்துவது குறித்த அவசியம், அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உளவியல் நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாக கூடிய, தீமையை பற்றி கவலை தெரிவித்து வருகின்றனர்.
ஆன்லைன் சூதாட்டம் (Online gambling)
சமீப காலங்களில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, 20 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. வரைமுறையற்று ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதன் வாயிலாக, கற்றல் குறைபாடுகள் மற்றும் பல சமூக ஒழுக்க குறைபாடுகள் ஏற்படுவதாக, அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. பல்வேறு நாடுகளில், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தியோ அல்லது முற்றிலுமாக தடை செய்தோ சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளன.
புதிய அவசர சட்டம் (New Ordinance)
ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக, புதிய அவசர சட்டம் இயற்ற, தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை, அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது, ஒழுங்குபடுத்துவது தொடர்பாக, பொது மக்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைய தலைமுறையினர், உளவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் ஆகியோரிடம் இருந்து கருத்துக்களை கேட்க, அரசு முடிவு செய்துள்ளது.
கருத்துகளை தெரிவிக்க விரும்புவோர், 'homesec@tn.gov.in' என்ற மின்னஞ்சல் முகவரியில், வரும் 12ம் தேதிக்குள் தெரிவிக்கலாம். ஆன்லைன் விளையாட்டுகள் பற்றிய கருத்துகளை நேரடியாக தெரிவிக்க விரும்பும் நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட அதிகாரியை நேரில் சந்தித்து, தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.
அதற்கு நாளை மாலை, 5:00 மணிக்குள் தங்களது வேண்டுகோளை மேற்கூறிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். கருத்து கேட்பு கூட்டம் வரும் 11ம் தேதி மாலை, 4:00 மணி முதல் நடக்கும்.
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனி நேரம் ஒதுக்கப்படும். நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் பங்கு பெறலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க