அட்சயத் திருதியை முன்னிட்டு நாடு முழுவதும் ரூ.15 ஆயிரம் கோடிக்கு தங்க நகைகள் விற்பனையாயின. இதேபோல் தமிழகத்தில் ஒரே நாளில் 18 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளில் தங்கம் வாங்க முடியாததால், இந்த முறை நகைகளை வாங்கிக்குவிக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.
அள்ள அள்ளக் கொடுக்கும் அட்சயப் பாத்திரத்தை அடிப்படையாகக் ஆண்டுதோறும் மே மாதம், அட்சயத் திருதியை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் தங்கம் வாங்கினால், செல்வம் மேலும் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை.
தமிழகம் முழுதும் உள்ள, 35 ஆயிரம் நகைக் கடைகளில் தினமும் சராசரியாக, பழைய மற்றும் புதிய தங்க நகைகளின் விற்பனை, 10 ஆயிரம் கிலோவாக உள்ளது. அக் ஷய த்ருதி தினத்தை முன்னிட்டு, மே 3ம் தேதி முன்னணி நகைக் கடைகள் மட்டுமின்றி, சிறிய கடைகளிலும் கூட, கூடுதல் தள்ளுபடி, குறைந்த செய்கூலி, பரிசு பொருட்கள் என, பல்வேறு சலுகைகள் முன்கூட்டியே அறிவித்தன.
கொரோனா பாதிப்பால், இரண்டு ஆண்டுகளாக கடைகள் மூடப்பட்டு, ஆன்லைன் வாயிலாக தங்கள் வாங்கியோர், தற்போது நகை கடைகளுக்கு நேரடியாக சென்று, தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டினர். அவர்களின் வசதிக்காக, அதிகாலை முதலே நகை கடைகள் திறக்கப்பட்டன.
வாடிக்கையாளர்கள் வெயிலில் சிரமப்பட கூடாது என்பதற்காக, நகைக் கடைகளுக்கு வெளியில் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. குடிநீர் பாட்டில், மோர், குளிர்பானங்கள், டீ, காபி போன்றவை தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தன.
விலையில் சரிவு
ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நிலவும் போரால், முந்தைய வாரங்களில், 40 ஆயிரம் ரூபாயை தாண்டிய 22 காரட் ஆபரண தங்கம் சவரன் விலை, நேற்று 38 ஆயிரத்து 368 ரூபாயாக குறைந்திருந்தது.
இரு தினங்களில் மட்டும் சவரனுக்கு 856 ரூபாய் சரிந்திருந்தது, வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இதனால், ஏற்கனவே பணம் செலுத்தி முன்பதிவு செய்திருந்தவர்களும், நேற்று கூடுதல் பணம் செலுத்தி, ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த நகைகளை விட அதிக எடையில் தங்க நகைகளை வாங்கினர்.
18 ஆயிரம் கிலோ
நகை சேமிப்பு திட்டங்களில் மாதம்தோறும் பணம் செலுத்தி வந்தவர்களும், அவற்றை ரத்து செய்து, நேற்று நகைகளை வாங்கினர்.
நேற்று ஒரே நாளில், 18 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையானதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, ஒரு கிலோ தங்கம் விலை 50 லட்சம் ரூபாய். இதன்படி, நேற்று மட்டும் 9,000 கோடி ரூபாய்க்கு தங்கம் விற்பனையாகி உள்ளதாக தெரிகிறது.
கடந்த ஆண்டு, கொரோனா தொற்று காரணமாக, கடைகளில் விற்பனை நடக்கவில்லை. 'ஆன்லைன்' வழியே நடந்த விற்பனையில், 12 ஆயிரம் கிலோவுக்கு மக்கள் நகை வாங்கினர். அதற்கு முந்தைய ஆண்டு, 5,000 கிலோ விற்பனையானது. இதேபோல் நாடு முழுவதும், ஒரே நாளில் ரூ.15,000 கோடிக்கு நகைகள் விற்பனை செய்யப்பட்டன.
மேலும் படிக்க...
பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் கால்சியம் குறைபாடு!
பிச்சை எடுத்து அன்னதானத்திற்கு ரூ1 லட்சம் நிதி- பிரமிப்பூட்டிய பாட்டி!