1,பெண்களுக்காக “அவள்” என்கிற புதிய திட்டத்தை தொடங்கிய முதல்வர்
தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்களின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, "அவள்" என்கிற புதிய திட்டம் மற்றும் மிதிவண்டி பயணத்தை தொடங்கி வைத்து, சிறப்புத் தபால் உறையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
"அவள்" திட்டத்தின் மூலம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தற்காப்பு பயிற்சிகள் அளிக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் அணுகுமுறை மற்றும் திறனை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 8.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு அம்ச பயிற்சி மற்றும் 2 உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தி, "அவள்" திட்டம் சென்னை பெருநகர காவலில் செயல்படுத்தப்படவுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
2,தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை- சாலையில் பாலைக்கொட்டி போராட்டம்! சிக்கலில் ஆவின் நிறுவனம்
தமிழ்நாடு அரசின் கீழ் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தினால் நாளொன்றுக்கு சுமார் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆவின் நிறுவனம் ஒரு லிட்டர் பசும்பாலை ரூ.32, எருமை பாலினை ரூ.42 என்கிற அளவிலும் கொள்முதல் செய்கிறது.
இந்நிலையில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு, தனியார் நிறுவனங்களின் கொள்முதல் விலைக்கு இணையாக லிட்டருக்கு 7 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் அரசிற்கு கோரிக்கை வைத்தது. பால் கொள்முதல் விலையினை உயர்த்தவில்லை என்றால் பால் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடைபெறும் என அச்சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் அறிவித்திருந்தார்.
இதையொட்டி, நேற்று ஈரோடு மாவட்டம் நாச்சியனூரில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி கறவை மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள் சாலையில் லிட்டர் கணக்கான பாலினைக் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
3,e-NAAM: மின்னணு முறையில் தேங்காய் கொள்முதல்: விவசாயிகள் மகிழ்ச்சி!
கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மின்னணு முறையில் தேங்காய் கொள்முதல் நடந்தது. இதனால், இனி விவசாயிகளுக்கு மிக எளிதான முறையில் தேங்காய்களை விற்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் மூலம் மறைமுக ஏல முறையிலும், பார்ம் டிரேடிங் எனப்படும் விவசாயிகளின் இருப்பிடத்துக்கே சென்றும் கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது.
இந்த வகையில் கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூர் பகுதி விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் சுமார் 300 தேங்காய்கள் கொள்முதல் நடைபெற்றது. செலவுகள் தவிா்ப்பு இதில் தேங்காய் ஒரு குவிண்டால் அதிகபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 300க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 100-க்கும் கொள்முதல் நடந்தது. விவசாயிகளின் இடத்துக்கே சென்று பரிவர்தனை செய்யப்படுவதால் போக்குவரத்து செலவு, ஏற்றுகூலி, இறக்குகூலி, கால விரயம் போன்ற செலவினங்கள் தவிர்க்கபடுகிறது.
மேலும் தேசிய வேளாண் மின்னணு திட்டத்தில் விற்பனை செய்யப்படுவதால் நல்ல விலையும், உடனடியாக பணமும் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
4,இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!
பொது மக்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம், எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு வட உள் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மார்ச் 17 முதல் மார்ச் 19 வரை, தமிழகப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
5,வெவ்வேறு காலநிலைகளில் சாகுபடி செய்ய 14 வகையான பூண்டுகள் கண்டறியப்பட்டுள்ளது- வேளாண் அமைச்சர் தகவல்
வெவ்வேறு வேளாண் காலநிலை சூழ்நிலைகளின் கீழ் சாகுபடி செய்ய 14 வகையான பூண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று ஒன்றிய அரசின் சார்பில் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
ராபி பருவத்தில் சாகுபடி செய்யும் பூண்டினை காரீஃப் பயிர் சுழற்சிக்கு ஏற்றதாக மாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பல்வேறு பருவங்களில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற வகைகளை அடையாளம் காண பூண்டின் மரபணு முன்னேற்றம் குறித்து திட்டமிட்ட ஆராய்ச்சி நடத்தப்படும் என்றார்.
6,வனத்துறையில் என்ன புதிய திட்டங்களை கொண்டு வரலாம்? அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
சென்னை, கிண்டி வேளச்சேரி சாலையில் உள்ள வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று (17.03.2023) வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் தலைமையில் வரும் சட்டமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டப் பணிகள் குறித்தும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் முன்னேற்றம் மற்றும் வனத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அலுவலகர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
7,ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு ஆர்ப்பாட்டம்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாய குறை தீர்க்கும் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் வரவில்லை எனக் கூறி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம்.
ஆட்சியர் இல்லாததால் துறை அலுவலர்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை கூட்டம் நடைபெற்றது. வேளாண் வணிகத் துறை மூலம் பயிர் அடமானக் கடன்களை விநியோகிக்கும் முன், முந்தைய கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகளை அவர்கள் வாசித்தனர். ஆனால், கேள்வி நேரம் தொடங்கும் முன்பே, கூட்டத்தை புறக்கணித்த கலெக்டரை கண்டித்து விவசாயிகள் பலர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
மருத்துவக் குறைவால் கலெக்டரால் வர முடியவில்லை என அதிகாரிகள் கூறியும், கலெக்டர் அலட்சியம் காட்டுவதாக கோஷங்களை எழுப்பியவாறு விவசாயிகள் மண்டபத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குதல், அனைத்து கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளை தூர்வாருதல், டிபிசிகளை முறையாக செயல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை மாநில அரசு உடனடியாக தீர்க்க வலியுறுத்தி, விவசாயிகள் குறைதீர் கூடம் முன்பு சிறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
8,உலகளாவிய தினை மாநாடு இன்று தொடக்கம்
மார்ச் 18, 2023 இன்று புதுதில்லியின் IARI பூசா வளாகத்தில் உள்ள NASC வளாகத்தில் உள்ள சுப்ரமணியன் மண்டபத்தில் மாண்புமிகு பிரதமர் அவர்கள் உலகளாவிய தினை (ஸ்ரீ அண்ணா) மாநாட்டு நிகழ்வை தொடங்கி வைக்கிறார்.
மேலும் படிக்க
Grain ATM: இனி ATM மூலம் ரேஷன் கோதுமை மற்றும் அரிசி கிடைக்கும்
PM MITRA- தமிழகத்திற்கு பச்சைக் கொடி காட்டிய மோடி.. நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்