தரிசு நிலத்தையெல்லாம், பரிசு பெறும் பசுமை நிலமாகவும், குறுங்காடுகளாகவும் மாற்றிய, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், பசுமை அமைப்புகளுக்கெல்லாம் தாய் திட்டமாகவும், தரணி போற்றும் தரமான திட்டமாகவும் பாராட்டுகளை குவித்துள்ளது. மரம் வளர்ப்பு மட்டுமல்லாது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு, மழைநீர் சேகரிப்பு என, எதிர்கால சந்ததியினருக்கான திட்டங்களை, வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளனர். 'வனத்துக்குள் திருப்பூர்' என்ற சாதனை திட்டத்துக்கு, மகுடம் சூடியது போல், நேர்த்தியான திட்டமிடலுடன், மூங்கில் பூங்கா திட்டம் முன்னெடுக்கப்பட்டது. விரைவில், பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட உள்ளது.
மூங்கில் பூங்கா (Bamboo Park)
இந்தியாவில், 156 வகையான மூங்கில் இனங்கள் பயிரிடப்படுகின்றன. வடகிழக்கு மாநிலங்களான, மேற்கு வங்காளம், ஒடிஷா, ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில், மூங்கில் வளர்ப்பு அதிகம் உள்ளது. மூங்கில் மரங்களில் இருந்து, வீடு கட்டும் மரங்கள் கிடைக்கும் என்பது மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான பயன்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மூங்கில் மரங்கள், ஒன்று முதல், 30 செ.மீ., அகலம் வரை வளரும் தன்மை கொண்டது. சரியான தட்ப வெட்ப நிலை இருந்தால், ஒரே நாளில் 250 செ.மீ., வளரும் தன்மை கொண்டுள்ளதாக, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சமீபகாலமாக, மூங்கில் மரத்திலும், மதிப்பு கூட்டு பொருட்கள், கைவினை பொருட்கள் தயாரித்து, சந்தைப்படுத்துவதன் மூலம், சில நாடுகள் அதிக வருவாய் ஈட்டி வருகின்றன. 12 ஏக்கர் மூங்கில் காடு மூங்கிலின் பெருமையை உலகம் உணர துவங்கியிருக்கிறது.
இந்திய வனப்பெருக்கு நிறுவனம், அரிய வகை, மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, நாடு முழுவதும் புதிய காடுகளை உருவாக்க ஊக்குவிக்கிறது. அந்நிறுவனத்தின் பங்களிப்புடன், திருப்பூர் மாநகராட்சி எல்லையில், 12 ஏக்கர் பரப்பளவில், அரியவகை மூங்கில்களுடன், மாபெரும் மூங்கில் பூங்கா அமைக்கும் பணி, ஆக்கப்பூர்வமாக நடந்து வருகிறது. மாநகராட்சி அருகே உள்ள இடுவாய் ஊராட்சி, சின்னக்காளிபாளையத்தில் உள்ள, மாநகராட்சிக்கு சொந்தமான, 12 ஏக்கரில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர் இத்தகைய அளப்பரிய சேவை நடந்து வருகிறது.
பட்டாம்பூச்சி பூங்கா (Butterfly Park)
முப்பது வகையான, மூங்கில் மரக்கன்றுகள், அத்துடன், 30 வகை அரிய வகை நாட்டு மரக்கன்றுகள், குழந்தைகள் விளையாட பூங்கா, நடைபயிற்சிக்கான பசுமை நடைபாதை, பட்டாம்பூச்சி பூங்கா ஆகியவை, பூங்காவில் இடம்பெற உள்ளன. 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட முதன்மை இயக்குனர் சிவராம் கூறியதாவது: திருப்பூர் அருகே அமைந்துள்ள மூங்கில்பூங்கா, மத்திய அரசின் மரப்பெருக்கு நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன், மாநகராட்சியுடன் இணைந்து உருவாக்கப்படுகிறது.
அரிய வகை மரக்கன்றுகள், ஒரே இடத்தில், 30 வகையான மூங்கில் மரக்கன்றுகளும் வளர்க்கப்படுகின்றன. சிறுவர்கள், குழந்தைகள் குதுாகலமாக துள்ளி விளையாடவும் வசதி செய்யப்படும். இளைஞர்கள், முதியவர்கள், உற்சாகத்துடன் நடைபயிற்சி செய்யவும், புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. விரைவில், மூங்கில்பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.
மேலும் படிக்க