ஜார்கண்டில் அரசு பண்ணைகளில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோழி, வாத்து இறைச்சி விற்பனைக்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் அரசு நடத்தும் கோழி பண்ணையில் பறவை காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது வரை மட்டும் 400-க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு தரப்பில் வெளியாகியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவை: லோஹாஞ்சலில் உள்ள பண்ணையில் 'கடக்நாத்' எனப்படும் புரதம் நிறைந்த கோழி இனத்தில் H5N1 வகை வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் பறவைக் காய்ச்சலால் லோஹாஞ்சலில் உள்ள அரசு கோழிப்பண்ணையில் ஏறத்தாழ 400-க்கும் மேற்பட்ட கடக்நாத் கோழிகள் இறந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பாதிப்புக்கு உள்ளான லோஹாஞ்சலில் உள்ள பண்ணையிலிருந்து 1 கி.மீ சுற்றளவில் உள்ள பகுதிகள் பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மண்டலமாகவும், 10 கி.மீ சுற்றளவில் உள்ள பகுதிகள் கண்காணிப்பு மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் மறு அறிவிப்பு வெளியாகும் வரை கோழி, வாத்து இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என பொகாரோ மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொற்று மாநிலம் முழுமைக்கும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அருண்குமார் சிங் தெரிவித்துள்ளார். பொகாரோ துணை ஆணையர் குல்தீப் சவுத்ரி கூறுகையில், மாவட்ட எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பெரிய கோழிப் பண்ணைகளிலுள்ள கோழி/வாத்து ஆகியவற்றில் வைரஸ் மாதிரிகளை ஆய்வு செய்ய மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பறவைகள் தவிர்த்து, பாதிக்கப்பட்ட மண்டலத்தில் வசிக்கும் மக்களிடமிருந்தும் மாதிரிகளை சேகரிக்க மருத்துவக் குழு செயல்பட்டு வருகிறது. பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க சதர் மருத்துவமனையில் தனி வார்டும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொதுமக்களும் நிலைமை சீராகும் வரை கோழி அல்லது வாத்து போன்ற இறைச்சிகளை சாப்பிடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கு பரவினாலும், அது ஒரு பரவலான தொற்றாக கண்டறியப்படவில்லை. மிகவும் அரிதாக தான் வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொரு நபருக்கு பரவுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டாலும் பெரிய அளவிலான பாதிப்பினை மனிதர்களுக்கு உண்டாக்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதீத காய்ச்சல் (100.4 டிகிரிக்கும் அதிகமாக), தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம், தலைசுற்றல் மற்றும் வாந்தி, சளி ஆகியவை அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
பறவைக்காய்ச்சல் அறிகுறிகள் பொதுவாக வைரஸ் தாக்கிய இரண்டு முதல் ஐந்து நாட்களுக்கு பிறகு தோன்றும். முடிந்தவரை தொற்றால் பாதிக்கப்பட்ட கால்நடை விலங்குகளிடமிருந்து மனிதர்கள் விலகி இருக்குமாறு சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
உலகை அச்சுறுத்த காத்திருக்கும் பறவை காய்ச்சல் -விலங்குகள் நல நிபுணர்கள் எச்சரிக்கை
மின்சாரமில்லாத இருசக்கர வாகனங்களுக்கு ஆப்பு வைத்த சண்டிகர் நிர்வாகம்