நீண்ட இடைவெளிக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வரும் நிலையில், இறைவணக்க கூட்டம் (Prayer) நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளதற்கு, பல்வேறு
தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசின் முடிவு, மாநிலம் முழுவதும் பொதுமக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுழற்சி முறை வகுப்புகள் (Rotational Classes)
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. வகுப்புகள், 'ஆன்லைன்' வழியே நடந்தன. எனினும், மொபைல் போன் வசதி இல்லாத குழந்தைகள், ஆன்லைன் வழியே கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டது. இது, மாணவர்களிடம் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் குறையத் துவங்கியது. அதைத் தொடர்ந்து, அக்டோபர் 1ல் இருந்து, முதல் வகுப்பு முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், சுழற்சி முறையில் வகுப்புகள் (Rotational Classes) நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன.
எந்த பாதிப்பும் இல்லை
பள்ளி வளாகத்தில், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்ற, கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
இறை வணக்கம் (Prayer)
கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கும் இறைவணக்க கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் என பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது, மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல மணி நேரம் வகுப்புகள் நடக்கும் போது, சில நிமிடங்கள் இறைவணக்கம் பாடுவதால், எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. சமூக இடைவெளியை கடைப்பிடித்து, இறைவணக்க கூட்டங்களை நடத்தலாம். பள்ளிகளில் மழை காலங்களில், இறைவணக்க கூட்டம் பொது வெளியில் நடக்காது. மாணவ - மாணவியர் தங்கள் வகுப்பறையில் இருப்பர். ஒலிப்பெருக்கி வழியே, இறைவணக்க பாடலை, ஓரிரு மாணவ - மாணவியர் பாடுவர். அவர்களுடன் மற்ற மாணவர்கள் வகுப்பறையில் இருந்தபடி பாடுவர்.
இதே வழிமுறையை தற்போது பின்பற்றலாம். ஆனால், அரசு வேண்டும் என்றே, இறைவணக்கக் கூட்டம் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசின் முடிவு சரியல்ல!
தி.மு.க.,வுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதால், மற்றவர்கள் மீது அதை திணிப்பதை ஏற்க முடியாது. கூட்டு இறைவணக்கம், சமூக இடைவெளியோடு கட்டாயம் நடத்தப்பட வேண்டும். பள்ளிகளில் இறைவணக்கம் பாடினால், கொரோனா பரவி விடும் என்பது விந்தையாக உள்ளது. அரசின் இந்த முடிவு சரியல்ல என்பதே பொதுமக்களின் எண்ணமாக உள்ளது.