பெரிய மார்க்கெட்டில் வாழைத் தார்களை பழுக்க வைக்க இரசாயன ஸ்பிரே அடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பழங்கள் இயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட வேண்டும். இரசாயன முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன. ஆனால், பழங்களை பழுக்க வைக்க 'எத்தனால்' என்ற வேதிப்பொருளை பயன்படுத்துவது தொடர் கதையாக உள்ளது.
இரசாயன ஸ்பிரே (Chemical Spray)
பெரிய மார்க்கெட் பாரதி வீதியில் வாழைப் பழங்களை பழுக்க வைக்க ஸ்பிரே முறையில் இரசாயனத்தை தெளிக்கும் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், கடை ஊழியர் ஒருவர், பொதுமக்களின் எதிர்ப்பினை மீறி வாழைத் தார்கள் மீது எத்தனாலை துளியும் பயம் இல்லாமல் ஸ்பிரே செய்கிறார். அதனை மற்றொருவர் எடுத்து வண்டியில் ஏற்றுகிறார். அதனை கண்ட பொதுமக்களின் ஒருவர் தட்டிக் கேட்கிறார்.
'இப்படி செய்ய வேண்டாம், மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும், மீறி ரசாயன ஸ்பிரே செய்தால் கலெக்டரிடம் புகார் அளிப்பேன்' என்கிறார். ஆனால், அந்த கடை ஊழியரோ, 'எத்தனையோ பேர் இங்கு வந்து பார்த்துட்டாங்க... கலெக்டர் வந்து என்ன ஆக போகுது...' என்று அலட்சியமாக கூறியபடியே மீண்டும் வாழைத் தார்கள் மீது எத்தனாலை பீய்ச்சி அடிப்பத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.
துணிச்சல் (Bravery)
இதனையடுத்து, இரசாயன கலவை தெளிப்பை தட்டி கேட்டவர், 'புதுச்சேரியில் எல்லாம் வீணாகி விட்டது. தவறெல்லாம் மறைமுகமாக செய்கிற காலம் மலையேறி, இன்றைக்கு தவறுகளை நேரடியாக செய்யும் காலம் வந்து விட்டது. அதுவும் பொதுமக்கள் மத்தியில் செய்யும் அளவுக்கு துணிச்சல் வந்து விட்டது. இதை கலெக்டரிடம் நேரடியாக பொன்மொழியாக கூறி பார்க்கிறேன்' என்று நொந்தபடியே அங்கிருந்து செல்கிறார். மாவட்ட கலெக்டரும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் என்ன நடவடிக்கை எடுக்க போகின்றனர் என, நெட்டிசன்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க