வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (Meteorological Center) தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திர காலமாக இருந்தாலும் தமிழகத்தில் வெப்பச்சலனம், வளிமண்டலத்தின் மேலடுக்கில் நிலவும் சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ராமேஸ்வரம், விளாத்திக்குளம், குழித்துறை, திருவாரூரில் மழை பெய்துள்ளது. வேதாரண்யம், ஜெயங்கொண்டத்திலும் மழை பெய்துள்ளதால் வெப்பம் தணிந்து குளுமை பரவி வருகிறது.
மிதமான மழை
இந்த நிலையில் குமரிக்கடல் அதனை ஒட்டிய தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் மழை
இன்று முதல் 15ஆம் தேதி வரை தமிழகத்தில் குமரி, நெல்லை, காரைக்கால், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குளிர்விக்க வரும் மழை
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 டிகிரி செல்சியஸ்
வெப்பநிலையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு தென் மேற்கு திசையிலிருந்து தரைக்காற்று வீச வாய்ப்ப்புள்ளதால் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் தற்போது நிலவும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
வரி சேமிப்பு திட்டமிடலை துவக்க சரியான நேரம் எது?
டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12-இல் மேட்டூர் அணை திறக்கலாம்! வேளாண் வல்லுநர் குழு பரிந்துரை!