நேற்றைய தினம் (நவம்பர் 26, 2024) 'வெள்ளை புரட்சியின் தந்தை' என நினைவுகூறப்படும் டாக்டர் வர்கீஸ் குரியனின் நினைவாக தேசிய பால்வள தினம் கொண்டாடப்பட்டது. அதனையொட்டி ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர், ராஜீவ் ரஞ்சன் சிங் “அடிப்படை கால்நடை பராமரிப்பு புள்ளி விவரங்களை (2024)” வெளியிட்டார்.
Basic Animal Husbandry Statistics (BAHS) 2024- ல் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராகவும், முட்டை உற்பத்தியில் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராகவும் இந்தியாவின் முன்னிலை வகிக்கிறது என தெரியவந்துள்ளது.
BAHS 2024-சிறப்பம்சங்கள்:
மார்ச் 2023 மற்றும் பிப்ரவரி 2024-க்கு இடையில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த மாதிரிக் கணக்கெடுப்பின் அடிப்படையில், பால், முட்டை, இறைச்சி மற்றும் தோல் போன்ற முக்கிய கால்நடைப் பொருட்களுக்கான (MLPs- major livestock products) உற்பத்தி மதிப்பீடுகள் பற்றிய நுண்ணறிவுகளை இந்த அறிக்கை வழங்குகிறது. கணக்கெடுப்பு பணியின் போது கோடை, மழை மற்றும் குளிர்காலம் என மூன்று பருவங்களை அடிப்படையாக கொண்டு தரவு சேகரிப்பு நடைப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.பால் உற்பத்தி
2023-24 ஆம் ஆண்டில் 239.30 மில்லியன் டன்கள் உற்பத்தியுடன், பால் உற்பத்தியில் உலகளவில் முதலிடத்தில் இந்தியா தனது ஆதிக்கத்தைத் தொடர்கிறது. இது முந்தைய ஆண்டை விட 3.78% அதிகரிப்பையும் கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க 63.47% வளர்ச்சியையும் கொண்டுள்ளது.
அதிக பால் உற்பத்தி செய்யும் மாநிலங்கள் முறையே உத்தரப் பிரதேசம் (16.21%), ராஜஸ்தான் (14.51%), மத்தியப் பிரதேசம் (8.91%) ஆகியவையாகும். கடந்தாண்டுடன் ஒப்பிடுக்கையில் ஆண்டு வளர்ச்சி விகிதமானது மேற்கு வங்கம் (9.76%), ஜார்கண்ட் (9.04%) மற்றும் சத்தீஸ்கர் (8.62%) கொண்டுள்ளன.
2.முட்டை உற்பத்தி
முட்டை உற்பத்தி 142.77 பில்லியன் யூனிட்களை எட்டியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் 6.8% வளர்ச்சியை கண்டுள்ளது. மாநில அளவில் ஆந்திரப் பிரதேசம் 17.85% பங்கைக் கொண்டு முட்டை உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா உள்ளன. லடாக் மற்றும் மணிப்பூர் ஆகியவை முறையே 75.88% மற்றும் 33.84% என கடந்தாண்டினை விட வளர்ச்சி விகிதத்தினை கொண்டுள்ளன.
3.இறைச்சி உற்பத்தி
இந்தியாவின் இறைச்சி உற்பத்தி 10.25 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 4.95% அதிகமாகும். மேற்கு வங்கம் 12.62% பங்களிப்புடன் முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் உள்ளன. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் அசாம் மாநிலம் இறைச்சி உற்பத்தியில் 17.93% ஆண்டு வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.
4.தோல் உற்பத்தி
சமீபத்திய ஆண்டுகளில் ஒரு சிறிய சரிவு இருந்தபோதிலும், தோல் (கம்பளி) உற்பத்தி 0.22% சுமாரான வளர்ச்சியை கொண்டுள்ளது, மொத்தம் 33.69 மில்லியன் கிலோ. நாட்டின் மொத்த கம்பளி உற்பத்தியில் ஏறக்குறைய பாதி ராஜஸ்தான் மாநிலமும், அதைத் தொடர்ந்து ஜம்மு & காஷ்மீர் மாநிலமும் பங்களிக்கின்றன என்பது BAHS 2024 அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
BAHS 2024 புள்ளிவிவர அறிக்கையானது இந்தியாவின் கால்நடைத் துறை வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என கருதப்படுகிறது. இவை கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு முக்கியமான தரவை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more:
வேளாண் துளிர் நிறுவனங்கள்: ரூபாய் 1.05 கோடி மானியம் வழங்கிய TNAU துணைவேந்தர்
பாரம்பரிய நெல் விதை இரகங்களின் பாதுகாவலர்: S.P.சஞ்சய் பெருமாள்!