மீன்பிடித் தொழிலில் ஏற்படும் அத்துமீறல்கள் குறித்து மீன்வளத்துறை உரிய நடவடிக்கை எடுக்காத விரக்தியிலும், ரோந்துப் படகுகள் வாங்க நிதி திரட்டுவதற்காக பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரம் மீன் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படை தாக்குதல் தவிர்த்து தமிழக மீனவர்களுக்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் போது பல்வேறு இடையூறுகள், பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றனர். டீசல் விலை உயர்வு, சட்டங்களை மீறி சிலர் சுருக்குமடி வலை பயன்படுத்துதல் போன்றவற்றினாலும் மீன்பிடித் தொழிலில் தொய்வு ஏற்பட்டுள்ளது. விதிகளை மீறி செயல்படுவோர் மீது கடலோர காவல்படை, மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுகிறது.
இந்நிலையில் தான் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலில் ஏற்படும் அத்துமீறல்கள் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், மீன்பிடித் துறைக்கு உயர் ரக ரோந்துப் படகுகள் வாங்க நிதி திரட்டும் வகையிலும் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரம் மீன் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேவாலயங்கள், கோயில்கள், மசூதிகள் முன்பு நடைபெறும் இந்த நூதனப் போராட்டத்தில் மீனவர்கள் கலந்துகொண்டு பிச்சை எடுத்து வசூலிக்கும் பணத்தை, படகுகள் வாங்குவதற்காக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலர் எம்.கருணாமூர்த்தி தெரிவிக்கையில், விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் தமிழ்நாடு கடல் மீன்பிடி சட்டத்தின் பெரும்பாலான விதிகளை மீறுவதாக சிஐடியு சங்கம் புகார் அளித்தும், மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர். இந்த விதிமீறல்களை கண்காணிக்க ரோந்துப் படகு கூடத் துறையிடம் உரிய படகுகள் இல்லாதது பெரும் இடையூறாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
ராமேஸ்வரத்தில் உள்ள ஓலைக்குடா தேவாலயம் மற்றும் மீன்வளத்துறை அலுவலகம் முன்பு இதேபோன்று சங்கம் போராட்டம் நடத்திய நிலையில், ரோந்துப் படகு வழங்கப்பட்டது. ஆனால், அது ஒரு சுற்றுலாப் படகு போல் இருக்கிறது, மேலும் இந்த ரோந்து படகு விதிமீறல்களில் ஈடுபடும் அதிக சக்திவாய்ந்த இழுவை படகுகளுக்கு இணையாக இல்லை. இதுபோன்ற படகுகளினால் மீன்வளத்துறை அதிகாரிகளின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது" என்று கருணாமூர்த்தி கூறினார்.
கடலோர பகுதி முழுவதும் விதிமீறல்களை கண்காணிக்க ரோந்து படகுகள் இல்லை என்பதை மீன்வளத்துறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.
இதனை தவிர்த்து படகு பராமரிப்பு, எரிபொருள், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது போன்ற நடைமுறை சிக்கல்களும் இதில் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விதிகளை மீறுவோர் மீதான புகார்களில் அலட்சியம் காட்டப்படுவதில்லை எனவும் சங்கத்தினர் வைத்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
ஜல்தபாரா தேசிய பூங்காவில் வாகனத்தை முட்டி மோதிய காண்டாமிருகம்- 7 பேர் படுகாயம்
கையில் பரீட்சை அட்டையுடன் 12 ஆம் வகுப்பு தேர்வெழுத வந்த பாஜக முன்னாள் MLA