மத்திய அரசின் வேளாண் சீர்திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக ஆந்திராவில் பள்ளிக் கல்லூரிகள் மூடப்பட்டு, பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது.
விவசாயிகள் வேதனை (Farmers suffer)
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் 3 வேளாண் சீர்திருத்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த சட்டங்கள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கீழ் விவசாயிகள் கொண்டு வரப்படும் நிலை உருவாகும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
மத்திய அரசின் இந்த வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
தொடரும் போராட்டம் (The struggle to continue)
ஆனால் விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்க மறுத்த நிலையில், டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் நிகழ்ந்த வன்முறை, கடும் குளிர், மழை, கொரோனா அச்சுறுத்தல் ஆகியவற்றைக் கடந்தும், பெண்கள், குழந்தைகள் எனக் குடும்பத்துடன் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
பாரத் பந்த் (Bharat Bandh)
இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று நாடு தழுவிய அளவில் முழு அடைப்புக்கு (பாரத் பந்த்) விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆதரவு (Support)
'சம்யுக்தா கிசான் மோர்ச்சா' விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய போராட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்டப் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன. இந்தப் போராட்டத்திற்கு பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களான பஞ்சாப், ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலமும் ஆதரவு அளித்திருந்தன.
நாடு முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி மற்றும் பிற நிறுவனங்கள், கடைகள், தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு, பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
குறிப்பாக ஆந்திராவில் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், மக்களின் இயல்புவாழ்க்கை முடங்கியது. மேலும், பள்ளி-கல்லூரிகளும் மூடப்பட்டன.
மருத்துவமனைகள், மருந்து கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் இயங்கிய நிலையில், பெரிய அளவில் வன்முறை ஏதுமின்றி, பொதுவாக அமைதியான முறையில் பந்த் நடைபெற்றது.
எச்சரிக்கை (Warning)
முன்னதாக, பந்த் போராட்டத்தை விளக்கி தொழிற்சங்கங்கள் சார்பில் 3 நாள் பிரசாரமும் நடைபெற்றது. கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இதனிடையே நாடு முழுவதும் சென்று போராடுவோம் என விவசாயச் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க...
பள்ளிகளுக்குப் பறந்த அதிரடி உத்தரவு- சபாஷ் பள்ளிக்கல்வித்துறை!