நாட்டில் ரத்தசோகை குறைபாட்டை குறைக்கும் நோக்கில் செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை திருச்சியில் வரும் அக்.1 முதல் அமல்படுத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை பொது விநியோக முறையின் கீழ் தொடங்கியுள்ளது. ரூ.174.64 கோடி செலவில், 2019-20 முதல் மூன்று ஆண்டுகளுக்கு இந்த முன்னோடி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மானிய நிதி பங்களிப்பு விகிதம்
வடகிழக்கு பிராந்தியங்களிலும், மலைப்பகுதி மற்றும் தீவு மாநிலங்களில் இத்திட்டத்துக்கு மத்திய அரசால் 90:10 என்ற விகிதத்திலும், மற்ற மாநிலங்களில் 75:25 என்ற விகிதத்திலும் நிதி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் திருச்சி தேர்வு
இந்த செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் மாநிலத்துக்கு ஒரு மாவட்டம் வீதம் 15 மாவட்டங்களில் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் திருச்சி மாவட்டம் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், செறிவூட்டப்பட்ட அரிசி, அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும், ஆலையில் செறிவூட்டப்பட்டு வழங்கப்படும். மாவட்டங்களை தேர்வு செய்தல், முன்னோடி திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகளிடம் உள்ளது. தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, குஜராத், உத்தரப்பிரதேசம், அசாம், தெலங்கானா, பஞ்சாப், சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், மத்தியப்பிரதேசம் ஆகிய 15 மாநிலங்கள் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன.
திட்டத்தின் நோக்கம்
மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் 2020 பிப்ரவரி முதல் இந்த முன்னோடி திட்டத்தை ஏற்கனவே செயல்படுத்தி வருகின்றன. இந்தியாவில், ரத்த சோகை குறைபாட்டைப் போக்கும் வகையில், தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் ( போஷன் அபியான்) செறிவூட்டிய உணவாக அரிசியை மத்திய அரசு சேர்த்துள்ளது.
இரும்பு, போலிக் ஆசிட், வைட்டமின் பி12 ஆகியவற்றை அரிசியுடன் சேர்த்து செறிவூட்டி ஊட்டச்சத்து மிக்கதாக மாற்றி, திருச்சி மாவட்டத்தில் 1224 ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும். தமிழக குடிமைப்பொருள் வழங்கு நிறுவனம், திருச்சியில் 12,000 டன் அரிசியை நுண்சத்துக்களை சேர்த்து, ரேசன் கடைகளுக்கு அனுப்பும் பணியைத் தொடங்கியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில், சுமார் 7.5 லட்சம் அட்டைதாரர்கள் இந்த முன்னோடி திட்டத்தின் கீழ், பயன் பெறுவார்கள். அரிசி செறிவூட்டலுக்காக, மூன்று ஆண்டுகளுக்கு ரூ.10 கோடியை, மத்திய நுகர்வோர் விவகாரம்,உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகை அரிசி, ஊட்டச்சத்து கலப்பு, கடைகளுக்கு கொண்டு செல்லுதலுக்கு பயன்படுத்தப்படும். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
தூத்துக்குடி தோட்டக்கலைத் துறை விவசாயிகளுக்கு மானியம் பெற அழைப்பு!
இந்த மாநில விவசாயிகள் கொடுத்துவைத்தவர்கள்! பிஎம் கிசான் திட்டத்தில் ரூ.10,000 பணம்!