அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டில், உண்மையுடனும், உளப்பாங்குடன் உழைத்திருக்கிறேன்.
ஒரு நாட்டில் ஒரு மாநிலத்தின் வரலாற்றில் ஓர் ஆண்டு என்பது ஒரு துளி தான். துளி போன்ற ஓர் ஆண்டில் கடல் போன்ற விரிந்த சாதனைகளை செய்துள்ளோம். கலைஞரும், பேராசிரியரும் என்மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி உள்ளேன். திமுக அரசின் திட்டங்கள் சென்று சேராத இடங்களே தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.
ஒரே கையெழுத்தின் மூலம், கோடிக்கணக்கான பெண்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என்ற ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி. 93,34,315 பேர் மக்களைத் தேடி மருத்துவம் மூலம் பயனடைந்துள்ளனர். 1,90,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது . 3,43,000 பேர் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் பயனடைந்துள்ளனர்.22,20,109 பேர் நகைக் கடன் தள்ளுபடியால் பயன் அடைந்துள்ளனர். வேலைவாய்ப்பு முகாம் மூலம் 68,800 வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, அரசு பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும். முதல் கட்டமாக இத்திட்டம் சில மாநகராட்சிகளிலும் தொலைதூர கிராமப்புறங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
Skills of excellence டெல்லியில் உள்ளது போல் தமிழகம் முழுவதும் "தகைசால் பள்ளி" யாக மேம்படுத்தப்படும். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் செயல்படுத்தப்படும். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் நடைமுறைக்கு வர உள்ளது.
நிறைவேற்றப்படாத தேவைகள் குறித்து அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைப்படி, நமது சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட ஆட்சியர்கள் உடன் இணைந்து முன்னுரிமை அடிப்படையில் தேவைகளை நிறைவேற்றித் தரப்படும். இத்திட்டத்திற்கு முதற்கட்டமாக ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் படிக்க