பிஎஸ்என்எல்(BSNL) நிறுவனத்தை புதுப்பொலிவூட்டவும், மறு சீரமைக்கவும் ரூ.1.64 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரொக்கஉதவியாக ரூ.43,964 கோடியும், பணமில்லாத உதவியாக ரூ.1.20 லட்சம் கோடியும் அடுத்த 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இதில் ரூ.44,993 கோடிக்கு 4ஜி சேவைக்கான ஸ்பெக்ட்ரமும் ஒதுக்கப்படும்.
பிஎஸ்என்எல் 4G (BSNL 4G)
பாரத்நெட் ப்ராஜெட்டுக்காக உருவாக்கப்பட்ட பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க்(பிபிஎன்எல்) பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைக்கப்பட உள்ளது. மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறுகையில் " கடந்த 2019ம் ஆண்டு இதேபோன்று ரூ.70ஆயிரம் கோடிக்கு நிதியுதவியை மத்திய அரசு பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனத்தை சீரமைக்க அளித்தது. இந்த சீரமைப்பு நடந்தபின், பிஎஸ்என்எல் லாபம் ரூ.1000 கோடியாக உயர்ந்தது. இதற்கு முன் இந்த அளவு லாபம் வரவில்லை.
சந்தையில் தற்போது 10 சதவீதத்தை மட்டுமை பிஎஸ்என்எல் வைத்துள்ளது. ரூ.19 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் கிடைக்கிறது. முதல்கட்ட உதவியால் பிஎஸ்என்எல் நிலையான நிறுவனமாக மாற முடிந்தது, இந்த நிதியுதவியால், சிறந்த நிறுவனமாக மாறும். பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி சேவை வழங்குவதற்காக 900 மற்றும் 1800 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரம் ரூ.44,993 கோடிக்கு வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதிவேகத்தில் டேட்டாக்களை வழங்கவும், மற்ற நிறுவனங்களுடன் போட்டியிடவும் முடியும். அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஆத்மநிர்பார் 4ஜிக்காக ரூ.22,471 கோடி ஒதுக்கீடு செய்யும்.
கிராமப்புறங்களுக்கு வணிகரீதியில்லாத வயர்லைன் சேவைகளுக்காக ரூ.13,789 கோடியை அரசுவழங்கும். பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு அதிகாரப்பூர்வ முதலீடு என்பது ரூ40ஆயிரம் கோடியிலிருந்து, ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்த்தப்படுகிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செயல்தரம், செயல்திறன் மேலும் அதிகரிக்கும், 4ஜி சேவை விரைவில் தொடங்கப்படும், நிதிச்சூழலும் மேம்படும். இந்த புத்தாக்க, புதுப்பொலிவு நடவடிக்கையால் அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் பிஎஸ்என்எல் நிறுவனம் லாபமான நிறுவனமாக மாறும்.
மேலும் படிக்க
மின்சார வாகனம் வாங்க போறீங்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்!
கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி: பள்ளி மாணவர்களுக்கு பேட்டரி டெஸ்ட் திட்டம் துவக்கம்.!