வங்கக்கடலில், உருவான புரெவி புயல், வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.
வலுவிழந்தது (Weakens)
தமிழகத்தை அச்சுறுத்திவந்த புரெவிப் புயல் இன்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, வங்கக்கடலில், மன்னார் வளைகுடா பகுதி மற்றும் அதனை ஒட்டிய ராமநாதபுரம் கடற்கரைப்பகுதிகிளில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
கனமழை எச்சரிக்கை (Heavy Rain Warning)
4-ந்தேதி (இன்று) தேனி, திண்டுக்கல், நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
5-ந்தேதி (நாளை) , 6-ந்தேதி (நாளை மறுதினம்) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில், இன்று (வெள்ளிக்கிழமை) வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் கனமழை
புரெவி புயல் காரணமாக சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. சென்னை எழும்பூர், கொரட்டூர், புரசைவாக்கம், அயனாவரம், ராயபுரம், கோடம்பாக்கம், தி.நகர், வளசரவாக்கம், திருவல்லிக்கேணி, திருவற்றியூர், கே.கே.நகர், தண்டையார்பேட்டை, சிந்தாரிப்பேட்டை, அடையாறு, திருவான்மியூர் பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் சிரமத்துக்கு ஆளானார்கள்.
மேலும் படிக்க...
பிரபல இந்திய நிறுவனங்களின் தேனில் சீனச் சர்க்கரைப்பாகு கலப்படம்- ஆய்வில் அதிர்ச்சித்தகவல்!
TNAUவில் டிச.5ம் தேதி காளான் வளர்ப்பு பயிற்சி!