தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்வதாக தகவல்கள் வெளியான நிலையில் இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்வதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளிவந்தன. இந்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நியூஸ் 18-க்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
பல்வேறு மாநிலங்களில் மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகள் நடைமுறைக்கு வந்துள்ளன. தமிழகத்தில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும். முதல்கட்டமாக சென்னையில் 500 பேருந்துகள் இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டு, அதனை வாங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
போக்குவரத்து துறையில் லஞ்சத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வரால் கடந்த வாரம் போக்குவரத்து துறையில் சேவை ஒன்று தொடங்கப்பட்டது. இதன்படி, ஆர்.டி.ஓ. அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று எல்.எல்.ஆர். பெறத் தேவையில்லை. இந்த உரிமத்தை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இந்த முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
ஓட்டுனர் உரிமத்தில் திருத்தம் செய்வதற்கு அலுவலகம் செல்லத் தேவையில்லை. இதுபோன்ற சேவைகள் விரிவாக்கம் செய்யப்படும். அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை அதிகரித்தாலும் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படக் கூடாது என்ற முடிவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது.
மேலும் படிக்க