புதிதாக சொட்டுநீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளும், ஏற்கனவே சொட்டுநீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் ஆகியிருந்தால் மீண்டும் மானியத்தில் புதிய முறை சொட்டுநீர் பாசனம், தெளிப்புநீர் பாசனம் அமைத்து பயனடையலாம் என, வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது. இதன் மூலம் கோடை வெயிலிலிருந்து பயிர்களை பாதுகாக்க முடியும் எனவும் வேளாண்துறை தெரிவித்துள்ளது.
ஸ்பிரிங்ளர் - தெளிப்பு நீர் பாசனம்
கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், விவசாய பயிர்கள், வாடி வதங்கி கருகி வருகின்றன. எவ்வளவு முறை தண்ணீர் தெளித்தாலும் ஒரு மணி நேரத்தில் காய்ந்து வறண்டு விடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சொட்டுநீர் பாசனம் மூலம் பாசனம் செய்யும் போது, பயிரின் வேர் மட்டுமே நனைகிறது. சுற்றுப்புற உஷ்ணம் அப்படியே இருப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். எனவே, ஸ்பிரிங்ளர் எனப்படும் தெளிப்பு நீர் பாசனம் அமைத்து பாசனம் செய்தால், விளைநிலம் முழுக்க நனைவதுடன், சுற்றுச்சூழலில் உள்ள வெப்பம் நீங்கி, குளிர்ச்சியான சூழல் ஏற்படும் என வேளாண்துறை தெரிவித்துள்ளது.
பயிர்கள் வாடாது - வேளாண்துறை நம்பிக்கை
காற்றிலும் ஈரப்பதம் அதிகரிப்பதால், வறட்சியில் இருந்து, சாகுபடி பயிர்கள் தப்பிக்கின்றன. இதனால், தற்போது நிலவும் கோடை வெயிலில் இருந்து பயிர்களை காக்க, சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ள விவசாயிகள், கூடுதலாக ஸ்பிரிங்ளர் எனப்படும் தெளிப்பு நீர் பாசனமும் அமைத்துக் கொள்ளலாம். தென்னந்தோப்பில் இருந்து, அனைத்து வகை பயிர்களுக்கும் இந்த பாசனத்தை பயன்படுத்தும்போது, கோடை வெப்பத்தால் ஏற்படும் வாட்டம் நீங்கி, பயிர்கள் பசுமையாக வளர்வதாக வேளாண் துறையினர் தெரிவிக்கின்றனர்.
மானியம் அமைக்க அழைப்பு
புதிதாக சொட்டுநீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளும், ஏற்கனவே சொட்டுநீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் ஆகியிருந்தால் மீண்டும் மானியத்தில் புதிய முறை சொட்டுநீர் பாசனம், தெளிப்புநீர் பாசனம் அமைத்து பயனடையலாம் என, தெற்கு வேளாண் உதவி இயக்குனர் நாகபசுபதி தெரிவித்துள்ளார். இதன் மூலம் கோடை வெயிலிலிருந்து பயிர்களை பாதுகாக்க முடியும் எனவும் வேளாண்துறை தெரிவித்துள்ளது.