அட்வான்ஸ்டு மொபைல், லட்ச ரூபாய் டூ வீலர் என உலகமே ஆடம்பர வாழ்க்கையின் பக்கம் விழுந்துகிடக்கிறது. வாழ்க்கையை அனுபவிப்பதாக நினைத்துக்கொண்டு, கடன் மேல் கடன் வாங்கி ஆடம்பர வாழ்க்கைக்கு பலரும் பெட்ரோல் ஊற்றி வருகின்றனர்.
இவற்றுக்கு இடைவேளை போடுவதற்காக வந்தது கொரோனா என்னும் கோவிட்-19.
இந்த வைரஸ் தொற்று, இத்தகையோரை, செல்லாக்காசாக மாற்றியதுடன், சேமிப்பின் உன்னதத்தையும் உணர்த்திக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை.
ஆக ஈட்டும் வருமானத்தில், சிறியத் தொகையை மட்டுமாவது சேமிக்க வேண்டியது அவசியம்.
அப்படி சேமிக்க விரும்புபவரா நீங்கள்? பெரியளவில் இல்லை, என்னால் மிகச் சிறிய தொகை தான் சேமிக்க முடியும், அதற்கு ஏற்ற சிறு சேமிப்பு திட்டம் இல்லையே என வருத்தப்படுபவரா நீங்கள்? உங்களுக்கு இந்த அஞ்சலக சிறுசேமிப்பு திட்டம் நிச்சயம் கைகொடுக்கும்.
போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் ((Post Office Recurring Deposit) என்பதே இந்தத் திட்டத்தின் பெயர். இதில், ஆயிரக்கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதே சிறப்பு அம்சம்.
அஞ்சலக சிறுசேமிப்புத்திட்டம்
சீட்டு கம்பெனிகளோடு ஒப்பிடும்போது, அஞ்சலக சேமிப்பு, மிகச்சிறந்த சிறுசேமிப்பாகும். 5 ஆண்டுகள் பணம் செலுத்த வேண்டும். செலுத்தும் பணத்திற்கோ பாதுகாப்பும், வட்டியும் கிடைக்கும். மாதந்தோறும் சிறியத் தொகையை செலுத்தி, பெரும் தொகையை முதிர்வுத்தொகையாகப் பெறலாம்.
தகுதி
தனிநபர் யாவரும் இந்தத்திட்டத்தில் டெபாசிட் செய்து சிறுசேமிப்புக் கணக்கைத் தொடங்க இயலும். யார் பெயரில் சேமிப்பு தொடங்கப்படுகிறதோ, அவரே இதனைத் தொடங்க வேண்டும். தம்பதியினர், சகோதரர்கள், நண்பர்கள் விரும்பினால் சேர்ந்து, கூட்டுக் கணக்கும் தொடங்க முடியும்.
ஏற்கனவே சேமிப்புக்கணக்கு தொடங்கியிருப்பவர்கள் விரும்பினால், தனிநபர் சேமிப்புக்கணக்கை, கூட்டு சேமிப்பாகவும் மாற்றிக்கொள்ளலாம். அதேபோன்று கூட்டு சேமிப்பை, எப்போது வேண்டுமானாலும், தனி சேமிப்பாக மாற்றிக்கொள்ளலாம்.
குறைந்த பட்ச சேமிப்பு
இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் மாதம் 100 ரூபாய் சேமிக்கலாம். அதிகபட்சமாக, 10ன் மடங்காக, அதற்கு மேல் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் சேமிக்க முடியும். அதற்கு உச்ச வரம்பு கிடையாது.
வட்டி விகிதம்
ஆர்டி சேமிப்பை 5 ஆண்டுகள் கட்டவேண்டியது கட்டாயம். அதைவிடக் குறைந்த வருட சேமிப்பு கிடையாது. ஒவ்வொரு காலாண்டிற்கும் கணக்கிட்டு வட்டி வழங்கப்படும். தற்போதைய நிலவரப்படி ஆண்டிற்கு 5.8 சதவீதம் வட்டி அளிக்கப்படுகிறது. இது இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அளிக்கப்படும் வட்டி விகிதம். ஒவ்வொரு காலாண்டிற்கும் மத்திய அரசு வட்டிவிகிதத்தை மாற்றி அறிவிக்கும்.
நிபந்தனைகள்
மாதா மாதம் சேமிப்புத் தொகையைச் செலுத்தாவிட்டால், தவறிய தவணைத் தொகைக்கு ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ச்சியாக 4 தவணைகளைக் கட்டத் தவறினால், உங்கள் சேமிப்புக் கணக்கு முடக்கப்படும். ஒருவேளை அவ்வாறு முடக்கப்பட்டாலும், அடுத்த இரண்டு மாதங்களில் மீண்டும் சேமிப்புக்கணக்கைத் தொடரும் வசதியும் உண்டு.
நாம் சேமிக்கும் பணத்தை சரியான திட்டத்தில் செலுத்தி, அதிக முதிர்வுத்தொகையைப் பெற வேண்டும் என்பதே நம் அனைவருடைய தேடல். அதற்கு அஞ்சலக சிறுசேமிப்பு சரியானத் தேர்வு.
மேலும் படிக்க...
வெறும் 4 சதவீத வட்டியில் சிறப்பு பயிர் கடன்- வழங்குகிறது எஸ்பிஐ!
வரும் 31ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய மாவட்ட வாரியாக பயிர் வகைகள் அறிவிப்பு!