உலகமெங்கிலும் 2022 ஆம் ஆண்டு 36.8 ஜிகாடன் அளவிலான கார்பன் டை ஆக்ஸைடு வாயு வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 1900 ஆம் ஆண்டு முதல் பதிவான கார்பன் டை ஆக்ஸைடு தரவுகளின் படி 2022 ஆம் ஆண்டு தான் அதிகமாக பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
கொரோனாவின் தாக்கத்தில் இருந்து கடந்த ஆண்டு விடைப்பெற்று உலகம் முழுவதும் மீண்டும் பழைய வேகத்தில் தொழிற்சாலைகள், வாகனங்கள் இயங்கியதன் விளைவாக கார்பன் டை ஆக்ஸைடு வாயுவின் உமிழ்வானது 0.9 சதவீதம் அதிகரித்து 2022 ஆம் 36.8 ஜிகா டன் என்கிற அளவினை எட்டியது என சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாசாவின் கூற்றுப்படி ஒரு ஜிகா டன்னின் நிறை என்பது முழுமையாக ஏற்றப்பட்ட 10,000 விமானதாங்கியின்(loaded aircraft carriers) நிறைக்கு ஒப்பானது.
கார், விமானங்கள், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்க எண்ணெய், நிலக்கரி அல்லது இயற்கை எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களை எரிக்கும்போது கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. வாயு வளிமண்டலத்தில் நுழையும் போது இது ஒசோன் படலத்தை தாக்குகிறது. இதன் விளைவாக பூமியில் வெப்பம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
காலநிலை மாற்றங்களும் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வை தீவிரப்படுத்தியது. அதிகப்படியான வறட்சியினால் நீரின் அளவு குறைந்ததால் நீரிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது பாதிக்கப்பட்டது. அதனை ஈடு செய்ய புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதற்கான தேவையும் அதிகரித்தது. மேலும் அதிகப்படியாக வீசிய வெப்ப அலைகளும் மின் தேவைகளை அதிகரித்தன.
புவி வெப்பமடைதலினால் ஏற்படும் மோசமான விளைவுகளை குறைக்க உலகம் முழுவதும் கரிய அமில வாயு உமிழ்வை குறைக்க வேண்டும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கும் சூழ்நிலையில், 2022 ஆம் ஆண்டு பதிவாகியுள்ள வாயு உமிழ்வானது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது என சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் பூவியியல் அமைப்பு அறிவியல் பேராசிரியரும், சர்வதேச குழுவான குளோபல் கார்பன் திட்டத்தின் தலைவருமான ராப் ஜாக்சன் கூறுகையில், “எந்தவொரு உமிழ்வு வளர்ச்சியும், அது ஒரு சதவீதமாக இருந்தால் கூட தோல்வியே” என்கிறார். கரியமில வாயு வளர்ச்சியையும், தேக்க நிலையையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதிக கரியமில வாயு வெளியேற்றம் பூமிக்கும், நமது ஆரோக்கியத்திற்கும் மோசமான விளைவை உண்டாக்கும் என்றார்.
நிலக்கரியிலிருந்து கரியமில வாயு வெளியேற்றம் கடந்த ஆண்டு 1.6% அதிகரித்துள்ளது. உலகளாவிய விமான போக்குவரத்து அதிகரித்ததால், எரிப்பொருளிலிருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் 2.5% அதிகரித்துள்ளது. விமானத் துறையின் விளைவாக ஏறக்குறைய பாதி கரியமில வாயு உமிழ்வு அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தாண்டு கரியமில வாயு வெளியேற்றம் குறைவாக இருந்தது.
2022 ஆம் ஆண்டு கூட வல்லுநர்கள் எதிர்பார்த்ததை விட குறைவாகவே வாயு வெளியேற்றம் இருந்துள்ளது. உலகிலுள்ள நாடுகள் பலவற்றில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்சார வாகனங்கள் ஆகியவற்றுக்கு அளித்த முக்கியத்துவத்தினால் 550 மெகா டன் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றம் தடுக்கப்பட்டுள்ளது.
ஒருபக்கம் கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்து வந்தாலும், மற்றொரு புறம் அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் சர்வதேச நாடுகள் இலக்கு நிர்ணயித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது வரவேற்புக்குரியது.
மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டினை அதிகரிக்கும் வகையில் அதற்கான மானிய சலுகையினை அரசுகள் அளிக்க முன்வரும் நிலையில் வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தலாம் என சர்வதேச எரிசக்தி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய நிர்வாகம் தவறிவிட்டது- ஜி20 மாநாட்டில் மோடி உரை