அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதிகளில், விவசாயிகள் 50 ஏக்கருக்கு மேல் முந்திரி விவசாயம் செய்து வருகின்றனர். அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொடர் மழை பெய்தால் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முந்திரி பூ பூத்து மார்ச், ஏப்ரல் மாதங்களில் முந்திரி பழங்கள் மற்றும் முந்திரி கொட்டைகள் கிடைக்கும். ஆனால், தற்போது பருவம் தவறிய மழையால் முந்திரி விவசாயம் பாதித்துள்ளது.
பருவம் தவறிய மழை
முந்திரி பழங்களை கால்நடைகளுக்கு (Livestock) உணவாக கொடுப்பது வழக்கம். முந்திரி கொட்டைகளை நன்கு காயவைத்து சேமித்து, விலை ஏறும்போது விற்பது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் தொடங்கி இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மழை தொடர்ந்து பெய்ததால் முந்திரி காய்க்கும் பருவம் தாமதமானது. மேலும் பருவநிலை மாறிய நிலையில் கடந்த மாதத்தில் 2, 3 முறை மழை பெய்ததாலும் முந்திரி பூக்கள் முழுவதும் கருகின. இதனால் இந்தாண்டு முந்திரி விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இழப்பீடு வழங்க கோரிக்கை
அரியலூர் மாவட்டத்தில் தரிசு நிலத்தின் தங்கம் எனப்படும் முந்திரி சாகுபடியை (Cashew cultivation) இங்குள்ள விவசாயிகள் பெரிதும் விரும்பி விவசாயம் செய்கின்றனர். ஆனால் இந்தாண்டு பருவ மழை மாறி பெய்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் ஏமாற்றமடைந்து உள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா (Corona) பாதிப்பால் கவலையடைந்த நிலையில், முந்திரி விவசாயமும் எங்களை ஏமாற்றி விட்டது. ஆண்டு ஒன்றுக்கு ஒரு ஏக்கர் முந்திரிக்கு மருந்து, உரம், ஆள்கூலி என ரூ.10 ஆயிரம் செலவாகி உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு முந்திரி பயிர்களுக்கு இழப்பீடு (Compensation) வழங்கினால் மட்டுமே முந்திரி விவசாயத்தை தொடர்வதோடு, வங்கியில் வாங்கிய விவசாய கடனையும் செலுத்த முடியும். மேலும் ஆண்டுதோறும் ஏக்கருக்கு முந்திரி விவசாயத்தில் செலவு போக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கிடைக்கும். ஆனால் இந்தாண்டு செலவு செய்த பணம் கூட கிடைக்கவில்லை, என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும் படிக்க
கால்நடைகளுக்குத் தீவனமாகும் தங்கரளி இலைகளில் விஷத்தன்மை - இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கை!
பொங்கல் கரும்பு உற்பத்திக்கு, விதைக் கரும்புகள் தயார் செய்யும் பணி தீவிரம்