காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளாவின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவின் அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு மீண்டும் அதிகரித்துள்ளது.
நேற்று அதிகாலை வரை காவேரியில் வினாடிக்கு 63,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து நொடிக்கு 50,000 கன அடியாக அதிகரித்திருந்தது. ஒகேனக்கல்லிலும் அதே அளவு நீர் பயந்து அருவிகளில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது.
மேட்டூர் அணைக்கு நொடிக்கு 50,000 கன அடியாக நீர் வரத்து இருந்த நிலையில் அணையின் நீர் மட்டம் 117.05 அடியை எட்டியது மற்றும் நீரின் இருப்பு 88.33 டிஎம்சி ஆக இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 18,000 கன அடியும், மேற்கு கால்வாயிலிருந்து 700 கன அடி நீரும் திறக்கப்பட்டது.
உயர்ந்து வரும் அணையின் நீர் மட்டம்
ஒகேனக்கலில் நேற்று நீர் வரத்தின் அளவு வினாடிக்கு 70,000 கன அடியாக உயர்ந்துள்ளது மற்றும் ஒகேனக்கல் அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் 2 வது நாளாக பரிசல் இயங்க தடை விதிக்கப்பட்டு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு நிலவரம் படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 73,000 கன அடியாக நீர் வரத்து அதிகரித்தது, அணையின் நீர் மட்டம் 118.11 அடியாக உயர்ந்துள்ளது. நீரின் இருப்பு 90.40 டிஎம்சி. நீர் வரத்து அதிகம் இருக்கும் காரணத்தால் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நேற்று மாலை முதல் வினாடிக்கு 23,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 700 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மேலும் ஓரிரு நாட்களில் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் காவேரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவேரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நேற்று இரவு 9 மணி முதல் 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறந்து விடப்பட்டு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் கரையோர பகுதிகளில் உள்ள 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
K.Sakthipriya
Krishi Jagran