மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களிங் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வறண்ட வானிலையே காணப்பட்டு வருகின்றது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மைய தென் மண்டல இயக்குனர் செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 ஆம் நாளான இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 26-ஆம் நாளான நாளைத் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
27-ம் தேதியில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், 28 மற்றும் 29 ஆகிய இருநாட்களில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையினைப் பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான அளவில் மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவினைப் பொறுத்தவரையில் மஞ்சளாறு (தஞ்சாவூர்) 4, செந்துறை (அரியலூர்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்) தலா 3, திருக்குவளை (நாகப்பட்டினம்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), முகையூர் (விழுப்புரம்) தலா 2, திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), கும்பகோணம் (தஞ்சாவூர்) தலா 1 செ.மீ மழை பெய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க