நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (ஆகஸ்ட் 10) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழை (Heavy Rain)
நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், கூடலூர் பஜார் 14 செ.மீ, அவலாஞ்சி 11 செ.மீ, மேல் கூடலூர் 10 செ.மீ, மழையும் பதிவாகியுள்ளன.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for Fishers)
இன்று, குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இப்பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
புகார் கேட்க சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கியது மின் வாரியம்!
ரிசர்வ் வங்கி நடவடிக்கையால் இனி சீனியர் சிட்டிசன்களுக்கு நல்ல காலம் தான்!