கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன. இந்நிலையில், பள்ளிகள் செயல்படும் நேரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தமிழக மக்களை வாட்டி வதைத்தக் கொரோனா வைரஸ் தொற்று, மாணவர்களை விடுமுறை அள்ளித்தந்தது ஒருபுறம் என்றால், மறுபுறம் ஆன்லைன் வகுப்புகள் மூலம், மாணவர்களை ஆசிரியர்கள் ஆட்கொள்ளும் நிலையும் ஏற்பட்டது. பின்னர் ஆண்டு இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு, திட்டமிட்டபடி பொதுத் தேர்வுகளும் நடத்தப்பட்டன.
நேரடி வகுப்புகள்
அதாவது கொரோனா வைரஸ் பரவல் காராணமாக குறைந்த நாட்கள் மட்டுமே நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது கொரோனா பரவல் குறைந்து உள்ளதால், இந்த ஆண்டு கட்டாயம் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது.
பள்ளிகள் திறப்பு
அதன்படி கோடை விடுமுறை முடிந்து வரும் 13 ஆம் தேதி நாளை, 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதே போல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 27 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 20 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வளாகங்களை தூய்மை செய்வது, மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆங்காங்கே அதிகாரிகள் தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர். அத்துடன் கடந்த இரு நாட்களாக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முகக்கவசம் கட்டாயம்
பள்ளிக்கு வரும் மாணவ- மாணவிகள் முகக்கவசம் அணிந்து வருகை தருவதுக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் தகவல்
இந்நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில், செய்தியாளர்களிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:
திட்டமிட்டபடி நாளை (ஜூன் 13 ) பள்ளிகள் திறக்கப்படும். தனியார் பள்ளிகள் பராமரிப்பு கட்டணம் என்கிற பெயரில் எந்த தொகையும் வசூலிக்கக் கூடாது. அப்படி வசூலிப்பதாக புகார் வந்தால் அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலம் முழுவதும் பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றி அமைப்பது குறித்து தமிழக முதல்வரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...