சென்னையில் உள்ள பொதுமக்களுக்கு தடையின்றி பொருட்கள் கிடைக்கும் வகையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விரைவில் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி கடைகள் துவங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் (Chennai Corporation Commissioner) தெரிவித்துள்ளார்.
கரோனாவால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவிசிய பொருட்களுக்கான விற்பனைக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது. என்றாலும் அவை செயல் படுவதற்கு குறிப்பிட்ட நேரங்களை அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் மளிகை கடைகள், பால் கடைகள், மருந்தகங்கள், காய்கறி கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
புகழ்பெற்ற உணவு விற்பனை நிறுவனங்களான ஸ்விக்கி, சோமாடோ மற்றும் டன்சோ ஆகியன 16 வகையான காய்கறிகளும் மற்றும் வெவ்வேறு பழங்களும் சந்தை விலையில் விற்க முன்வந்துள்ளன. மேலும் குடியிருப்பாளர்கள் வசதிக்காக இணையதளம் மற்றும் தொலைபேசி வாயிலாக மதியம் 1 மணி வரை முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 9025653376, 044 2479113 என்ற எண்களைத் தொடர்பு கொண்டு தங்களது ஆர்டரை தெரிவிக்கலாம். மேலும் www.cmdachennai.gov.in இணையதளத்தில் ரூ .250 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம். குடியிருப்பாளர்கள் வசதிக்காக ஐந்து நாட்களுக்குரிய காய்கறிகளை ஒரே ஆர்டரில் வாங்கலாம்.
சென்னை மாநகராட்சியின் சார்பில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைந்து மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி கடைகள் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களுக்கு நியாயமான விலையில், பொருட்கள் கிடைக்கவும், வணிகர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
நடமாடும் மளிகை மற்றும் காய்கறி அங்காடிகள்
- சென்னை முழுவதும் 5,000 மூன்று சக்கர சைக்கிள்கள் மற்றும் 2000 சிறிய மோட்டார் வாகனங்களின் மூலம் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி அங்காடிகள் செயல்படவுள்ளன.
- நடமாடும் காய்கறி மற்றும் மளிகை வாகனங்களில் செல்லும் வணிகர்கள் தேவையான உபகரணங்கள் அணிந்து விற்பனை செய்யும் படி அறிவுறுத்தப் பட்டுள்ளது.
- வணிகர்களுக்கு சென்னை மாநகராட்சியின் சார்பில் சிறப்பு அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் இந்த வாகனங்களில் மாநகராட்சியின் பதாகைகள் அமைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் வணிகர்கள் ஏதுவாக அவர்களுடைய பகுதிகளிலிருந்து காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை கொண்டு செல்ல வாகன போக்குவரத்திற்கான அடையாள அட்டையும் மாநகராட்சியின் சார்பில் வழங்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.