சென்னையை புரட்டிப்போட்ட கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவில் 34 செ.மீ மழைப்பதிவாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு பெரும் வெள்ளம் ஏற்பட்ட போது 33 செ.மீ மழை பெய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மழை இரவு வரை நீடிக்கும் என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 9:15 மணியளவில் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம் பின்வருமாறு- வங்கக்கடல் பகுதியில் நிலவும் மிக்ஜாம் புயல் இன்று (5:30 ) மணியளவில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதுச்சேரிக்கு வடகிழக்கே சுமார் 210 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து நாளை (5-12-2023) முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழவேற்காடு பகுதியை சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குளத்துமேடு ,கருங்காளி, செஞ்சியம்மன் நகர் பகுதியில் உள்ள 308 பேரை மீட்டு ஆண்டார் மடம் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவும் வழங்கப்பட்டுள்ளது என திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வேளச்சேரி, மேற்கு தாம்பரம் செல்லக்கூடிய சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரியில் இருந்து பள்ளிக்கரணை, மேற்கு தாம்பரம் போன்ற பகுதிகளுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
மிக்ஜாம் புயல் எதிரொலியாக கோவை- சென்னை இடையே 4 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவை எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், சென்னை - கோவை “வந்தே பாரத்”, சென்னை - கோவை “இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்” ஆகியன ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேப்போல், சென்னை விமான நிலையத்தையும் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், காற்றின் வேகம் அதிகரித்து வருவதால், அனைத்து விமானங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புயலை விட கொடூரமாக விலையேறிய தங்கம்- எங்கே போய் முடியுமோ?
சென்னை நோக்கி வரும் விமானங்களும் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பபடுகின்றன. புயல் நெருங்குவதால் புதுச்சேரி கடற்கரை சாலை மூடப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீ நகர் காலனியில் தொடர் கனமழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. மேலும் பலத்த காற்றால் மரங்கள் முறிந்ததால் பொதுமக்கள் அவதி. மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை வெதர்மேன் என சமூக வலைத்தளங்களில் அறியப்படும் பிரதீப் ஜான், இந்த மோசமான சூழலை விவரிக்க வார்த்தைகள் இல்லை. மிக்ஜான் புயல் சென்னை கடலோரப் பகுதிகளை புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறது. மேற்கு நோக்கி நகரும் கருமேகங்கள் சென்னையில் மையம் கொண்டுள்ளதால் இன்று இரவு வரை சென்னையில் அதிகனமழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையும் காண்க:
மிக்ஜாம் புயலால் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்- கனமழை பெய்யும் மாவட்ட விவரம்