தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவும் காரணத்தினால் அடுத்த சில மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று காலை 10 மணியளவில், சென்னையிலுள்ள வானிலை ஆய்வு மையம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேசான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
தேனி, விருதுநகர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் காரைக்கால் ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்றைய தினம் திருப்பத்தூர் பகுதியில் அதிகப்பட்சமாக 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், அதனைத் தொடர்ந்து ஈரோடு பகுதியில் அதிகப்பட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியிருந்தது. கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில்- அடுத்த சில தினங்களுக்கு மழைக்கான வாய்ப்புள்ளதாக நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவற்றின் விவரம் பின்வருமாறு-
12.04.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 13.04.2024: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
14.04.2024 முதல் 16.04.2024 வரை; தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 17.04.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அடுத்த சில தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: 12.04.2024 முதல் 15.04.2024 வரை: குறிப்பிட்ட தினங்களில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.
வானிலை மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை தொடர்பான மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
Read more:
இரக்கம் காட்டாத தங்கம்- ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்வு!
அதிகரிக்கும் வெயில்- திண்டுக்கல் மாவட்ட கால்நடை விவசாயிகளே ரெடியா இருங்க!