தமிழ்நாட்டை தொடர்ந்து முதன்மை மாநிலமாக திகழச் செய்திட அனைவரும் ஒற்றுமையுடன் உழைத்திடுவோம் என தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புத்தாண்டு மலர்கின்ற இந்த இனிய நாளில், எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ்ந்திடவும், வறுமைக் கோட்டிற்குக் கீழ் எவரும் இல்லை என்ற நிலையினை அடைந்திடவும், பெண்களின் வாழ்வு மேன்மையுறவும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டார்கள்.
எங்கள் அரசு, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு வளர்ச்சி மற்றும் மக்கள் நலத் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதால், வேளாண்மை, நீர் மேலாண்மை, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், எரிசக்தி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சமூகநலன் போன்ற அனைத்து துறைகளிலும் சாதனைகள் பல படைத்து, மத்திய அரசின் விருதுகளை தமிழ்நாடு தொடர்ந்து பெற்று வருகிறது.
மக்களின் நல்வாழ்விற்காக மாண்புமிகு அம்மாவின் அரசு செயல்படுத்தி வரும் எண்ணற்ற நலத்திட்டங்களை அனைவரும் சிறப்பான முறையில் பயன்படுத்தி, தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதோடு, வளமும் வலிமையும் மிக்க தமிழ்நாட்டை தொடர்ந்து முதன்மை மாநிலமாக திகழச் செய்திட அனைவரும் ஒற்றுமையுடன் உழைத்திடுவோம்.
மலரும் இப்புத்தாண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு வளமான வாழ்வையும், நிலையான வளர்ச்சியையும் தொடர்ந்து வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள் போரட்டம் : மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!!
ATMல் பணம் எடுக்கப்போறீங்களா? தோல்வியுறும் பரிவர்த்தனைக்கு அபராதம்- வாடிக்கையாளர்களே உஷார்!