சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் “தமிழ்நாடு எத்தனால் கொள்கை 2023” வெளியிட்டார். இக்கொள்கை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில், இந்தியாவிலேயே முதன்மை மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. தமிழக அரசு சார்பில் சமீபத்தில் “தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை-2023” மற்றும் ”தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023” ஆகியவற்றை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில் “2023-தமிழ்நாடு எத்தனால் கொள்கை” -யினை முதல்வர் வெளியிட்டார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
தமிழ்நாடு எத்தனால் கொள்கை 2023:
கொள்கையின் நோக்கம்
தமிழ்நாட்டை பசுமை பொருளாதாரம் மற்றும் குறைந்த செலவில் மாற்று பசுமை எரிபொருளுக்கான முதலீட்டு மையமாக மேம்படுத்துதல் இக்கொள்கையின் நோக்கமாகும்.
கொள்கையின் அவசியம்
எத்தனால் கலந்த பெட்ரோல் மூலம் வாகனங்கள் வெளியேற்றும் புகை உமிழ்வு வெகுவாக குறையும் என்பதால் சுற்றுப்புற மாசுபாட்டின் நிலை பெருமளவு குறைந்து, மக்களின் சுகாதாரம் பேணப்படும் மற்றும் அவர்களின் வாழ்க்கை நிலை மேம்படும். இம்முயற்சி, ஐக்கிய நாடுகள் சபையின் COP 26-இல், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்காக, 2070-ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய புகை உமிழ்வு இலக்கை அடைவோம் என்று இந்தியா அளித்துள்ள உறுதிமொழியை நிறைவேற்றுவதில் தமிழ்நாட்டின் முக்கிய பங்களிப்பாக இக்கொள்கை அமையும்.
எத்தனால் கலந்த பெட்ரோலை ஊக்குவிப்பதற்கான காரணிகள்
உபரி பருவத்தில், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனில் மறுமலர்ச்சி எற்பட்டு இதனால் சர்க்கரை ஆலைகளின் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
எனவே, விவசாயிகளுக்கு தரப்படவேண்டிய விளைபொருள் கொள்முதலுக்கான நிலுவைத் தொகை தாமதமின்றி, வழங்கிட இயலும். கரும்பு மற்றும் மக்காச்சோளம் போன்ற மூலப்பொருட்களை பயிரிடும் விவசாயிகளின் வருமானம் பெருமளவு அதிகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். வடிப்பாலை கரையக்கூடிய ஈரதானிய பொருட்கள் (DWGS) மற்றும் வடிப்பாலை கரையக்கூடிய உலர் தானிய பொருட்கள் (DDGS) ஆகியன கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும், எரிபொருள் இறக்குமதியில் வெளிநாடுகளை சார்ந்து இருத்தல் குறையும் என்பதால் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும்.
இக்கொள்கை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், இ.ஆ.ப., தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன், இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு கூடுதல் செயலாளர் ம. பல்லவி பல்தேவ், இ.ஆ.ப., வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஆஷா அஜித், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் காண்க:
PM MITRA- தமிழகத்திற்கு பச்சைக் கொடி காட்டிய மோடி.. நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்