கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை இணையவழி மூலம் செலுத்தும் வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மேலும், இதே நிகழ்வில் தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சிக் கணக்குகள் திட்டத்திற்கான இணையதளத்தினையும் தொடங்கி வைத்தார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2022-23 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் செறுத்த வேண்டிய வீட்டுவரி, தொழில்வரி, குடிநீர்க் கட்டணம், உரிமக் கட்டணம் போன்றவற்றை தற்போது ஊராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ அல்லது ஊராட்சி செயவர் மூலமோ செலுத்த வேண்டியுள்ளது. இச்சேவைகள் அனைத்தும் இணைய வழியில் பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பொதுமக்கள் கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வீட்டுவரி, தொழில்வரி, குடிநீர்க் கட்டணம், வரியல்லாத கட்டணங்கள் போன்றவற்றை இணைய வழியில் செலுத்தும் வகையில் தேசிய தகவலியல் மையத்தால் (National Informatics centre) உருவாக்கப்பட்டுள்ள https://vptax.tnrd.tn.gov.in/ என்ற வரி செலுத்தும் முனையத்தை (Online Tax Portal) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.
இவ்விணையதளத்தின் மூலமாக இணைய வழி கட்டணம் (Online Payment), ரொக்க அட்டைகள் (Debit / ATM Cards Payment), கடன் அட்டைகள் (Credit Card Payment), யுபிஐ கட்டணம் (UPI Payment) மூலம் பணத்தினை செலுத்திட முடியும். இதன் மூலம் பொதுமக்கள் எளிதாக 24x7 முறையில் எந்த நேரத்திலும் வரி/ கட்டணம் செலுத்திட இயலும். இந்த நடவடிக்கையின் மூலம் ஊராட்சி பணியாளர்களின் பணிச்சுமை பெருமளவு குறையும்.
மேலும், கிராம ஊராட்சியின் பொறுப்புணர்வும், வெளிப்படைத் தன்மையும் உறுதி செய்யப்படும். மேலும், பெறப்படும் வருவாய் இனங்களின் மூலம் கிராம ஊராட்சியின் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த இயலும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
TNPASS- புதிய இணையதளம்: இது எதற்காக?
கிராம ஊராட்சிகள் தற்போது ஊராட்சியின் பொதுநிதி, மின் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம், அரசின் திட்டப் பணிகள் போன்ற பல்வேறு பொறுப்புகளை மேற்கொள்ள 11 வகையான கணக்குகளை பராமரித்து வருவது கடினமான செயலாக உள்ளது.
அதனை எளிமைப்படுத்தும் விதமாக தமிழ்நாடு எளிமைப்படுத்தபட்ட ஊராட்சிக் கணக்குகள் திட்டத்தை உருவாக்கி, 3 கணக்குகளை மட்டுமே பராமரிக்கும் நிலையினை இந்தியன் வங்கியின் ஒத்துழைப்புடன் ஏற்படுத்தியுள்ளது அரசு. இதற்கென பிரத்யேகமாக தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சிகள் கணக்குகள் திட்டத்தின் TNPASS என்ற புதிய இணையதளத்தையும் தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.
இதன்மூலம், கிராம ஊராட்சித் தலைவர்கள் மேற்கூறிய கணக்குகளின் இருப்பு விவரங்களை அறிய வங்கி அலுவலரைச் சார்ந்து இருத்தலைக் குறைத்து, ஊராட்சிக்குத் தேவையான பணிகளை நிதி இருப்பிற்கு ஏற்ப உடனடியாக மேற்கொள்ளவும், நிதிப் பரிவர்த்தனைகளை நிகழ்நேரத்தில் அறிந்திடவும் இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே:
PM Kisan விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா? இதை பண்ணுங்க உடனே
ஆந்திர கடலோரம் புதிய ஆபத்து- 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை