திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேனிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துக்கொண்ட பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நீட் தேர்வுக்கு நாம் கொடுத்த அழுத்தம் காரணமாகவே தமிழக அரசின் தீர்மானங்களை ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பியிருக்கின்றார் என்றார்.
மேலும் அவர் பேசுகையில்;நீட் தேர்வுக்கு எதிரான முதலமைச்சரின் குரல் நியாயமான குரல். ஏற்கனவே பல சட்ட போராட்டங்களில் அவர் வெற்றி பெற்றது போல் நீட் தேர்வு சட்ட போராட்டத்திலும் முதல்வர் வெற்றி பெறுவார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படாமலேயே ஆளுநர் மாளிகையில் தேங்கிக்கிடந்தது. நம் முதல்வரின் அழுத்தத்தால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
மேலும், அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களை தக்க வைத்து கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு 9494 ஆசிரியர்களை பணியில் அமர்த்த உள்ளோம்.மாணவர்கள் வகுப்பறைகளுக்கு செல்போனை கொண்டு வரக்கூடாது. அப்படி கொண்டு வரும் மாணவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டால் செல்போன்கள் மீண்டும் மாணவர்களிடம் தரப்பட மாட்டாது.
கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்கள் அதிகமாக செல்போன்களை பயன்படுத்திய காரணத்தினால் நிறைய சிரமங்களும், பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கின்றது. தற்போது அதனை சரி செய்வதற்கு வகுப்பறையில் பாடம் எடுப்பதற்கு முன்பாகவே அவர்களுக்கு ரெஃரெஸ்மெண்ட் கொடுக்கப்பட்டு பின்னர்தான் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.
குறிப்பாக 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் 5 நாட்கள் என்.ஜி.ஓ., காவல் துறை அதிகாரிகள் போன்றவர்கள் சிறப்பு வகுப்புகளை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. படிப்படியாக இல்லம் தேடி கல்வித்திட்டம் நிறுத்தப்படும். ஏனென்றால் கொரோனா பெருந்தொற்றால் நிறுத்தப்பட்ட அனைத்து வகுப்புகளும் வழக்கம்போல் முறையாக துவங்கியிருக்கின்றன. ஜி.எஸ்.டி., வரி நிலுவை குறித்து பாரத பிரதமர் மோடியிடம் பேசி வரித்தொகையினை பெற்றெடுப்போம்.
மேலும் படிக்க
இயற்கை முறையில் கால்நடை தீவனம் தயாரித்து அசத்தும் பட்டதாரி பெண்மணி