சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஆய்வு செய்தார்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்டம் கட்டம் II-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு 3, 4 மற்றும் 5 ஆகிய மூன்று வழித்தடங்கள் 128 மெட்ரோ இரயில் நிலையங்களுடன் ரூ.63,246 கோடி செலவில் மெட்ரோ இரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை இன்று 04.04.2023 தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் II-ல் மாதவரம் பால் பண்ணையில் இருந்து மாதவரம் நெடுஞ்சாலை வரையிலான முதலாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் நீலகிரி ஆனது மொத்த நீளமான 1400 மீட்டரில் 700 மீட்டர் நீளத்தை கடந்துள்ளது. மாதவரம் பால் பண்ணையில் இருந்து மாதவரம் நெடுஞ்சாலை வரையிலான இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் பொதிகை ஆனது மொத்த நீளமான 1400 மீட்டரில் 250 மீட்டர் நீளத்தை கடந்துள்ளது. மாதவரம் பால் பண்ணையில் இருந்து வேணுகோபால் நகர் மெட்ரோ வரையிலான மூன்றாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஆனைமலை மொத்த நீளமான 400 மீட்டரில் 100 மீட்டர் நீளத்தை கடந்துள்ளது.
மாதவரம் பால் பண்ணையில் இருந்து வேணுகோபால் நகர் மெட்ரோ வரையிலான நான்காவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் சேர்வராயன் ஆனது சுரங்கம் தோண்ட செலுத்துவதற்கு தயாராக உள்ளது. வேணுகோபால் நகர் மெட்ரோ இரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள், வழித்தடம் 3-ல் மாதவரம் பால் பண்ணையில் நடைபெற்று வரும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் ஆகியவற்றை தலைமைச் செயலாளர் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, கட்டுமானக் குழுவினருக்கு, குறிப்பாக பணியிடத்தை ஒட்டிய சாலையில் பயணிக்கும் பொதுமக்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு தலைமைச் செயலர் அறிவுறுத்தினார். வழித்தடம் 5 இன் கீழ் உயர்த்தப்பட்ட தொகுப்பை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கும்படி அறிவுறுத்தினார்.
சுரங்கம் தோண்டும் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் பணிகளை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தினார். சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் முன் பகுதிக்கு சென்று சுரங்கம் தோண்டும் இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்டறிந்தார். சுரங்கம் தோண்டும் இயந்திரத்திற்குள் பணியாளர்களின் நலனுக்காக எடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி மற்றும் வாயுக்களின் அளவு பற்றியும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், இ.ஆ.ப., திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
மேலும் காண்க:
எங்கடா.. இங்க இருந்த பறவையை காணும்- டிவிட்டர் பயனாளர்களுக்கு அதிர்ச்சியளித்த மஸ்க்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களை பாலைவனமாக மாற்றிவிடாதீர்கள்- அன்புமணி ராமதாஸ்