தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தென் தமிழக உள் மாவட்டங்களில் மிகத்தீவிரமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த சில தினங்கள் கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுக்குறித்து தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமசந்திரன் மாவட்ட நிர்வாகங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். கனமழை எச்சரிக்கையினைத் தொடர்ந்து, மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழைப் பொழிவு ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று (05.01.2024) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி, பின்வரும் நாட்களில் கனமழை பெய்யும் மாவட்டங்களின் விவரம்:
06.01.2024: கனமழை - நீலகிரி. கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
07.01.2024: கனமழை முதல் மிக கனமழை பெய்யும் மாவட்டங்கள்: கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்: மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
08.01.2024: திருவள்ளூர் மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானிலை எப்படி?
07.01.2024-அன்று சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும். மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை விவரம் பின்வருமாறு-
Read also: சொட்டு நீர் பாசனம் அமைக்க சரியான நேரம்- மானியத்தை அறிவித்த ஆட்சியர்
06.01.2024- 07.01.2024: தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை அடுத்துள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், மேற்சொன்ன பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
மேலும் வானிலை எச்சரிக்கைத் தொடர்பான விவரங்களை தெரிந்துக்கொள்ள mausam.imd.gov.in/chennai என்கிற இணையதளத்தை காணவும். நேற்றைய தினம் அதிகப்பட்சமாக தமிழ்நாட்டில் தொண்டி பகுதியில் தலா 33.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: வேளாண் இடுபொருள் விற்பனையாளர்களுக்கு பட்டயப்படிப்பு- அரசு சார்பில் 50 % நிதியுதவி