CM stalin launched the scheme of Two power tillers per village
சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில் வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் நடைப்பெற்ற நிகழ்வில் புதிய வேளாண் கட்டிடங்களை காணொலி மூலம் திறந்து வைத்து, ஒரு கிராமத்திற்கு இரண்டு பவர்டில்லர் இயந்திரங்கள் என்ற அடிப்படையில் வேளாண் இயந்திரம் வழங்குதலையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
வேளாண் கருவிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தல்: 2023-24 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை-உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களில், ஒரு கிராமத்திற்கு இரண்டு பவர்டில்லர் இயந்திரங்கள் என்ற அடிப்படையில் வரும் நிதியாண்டில், 2,504 கிராமங்களுக்கு 43 கோடி ரூபாய் மானியத்தில் பவர்டில்லர்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, குறைந்த அளவு பரப்பில் வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் சிறிய வகை வேளாண் இயந்திரங்களை கொண்டு உழவுப்பணிகள் மற்றும் இதர வேளாண் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, முதற்கட்டமாக 35 கோடி ரூபாய் மானியத்தில் 3,907 விவசாயிகளுக்கு பவர்டில்லர்கள் மற்றும் 293 விவசாயிகளுக்கு விசை களையெடுப்பான் கருவிகள் என மொத்தம் 4200 விவசாயிகளுக்கு இக்கருவிகள் வழங்கப்படுகிறது.
இதனை தொடங்கி வைக்கும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர் இன்று இரண்டு விவசாயிகளுக்கு பவர்டில்லர்கள் மற்றும் ஒரு விவசாயிக்கு விசை களையெடுப்பான் கருவி வழங்குவதற்கான ஆணைகளை வழங்கினார்.
திறக்கப்பட்ட புதிய வேளாண் கட்டிடங்கள் விவரம்:
சென்னை - கிண்டி, வேளாண் தொழில்நுட்ப பசுமை பூங்காவில் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்திற்கான 32 கோடியே 64 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நிர்வாகக் கட்டடம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 4 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்.
திருவண்ணாமலை மாவட்டம் - தெள்ளானந்தலில் 3 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சமையல் எண்ணெய்களுக்கான இயந்திரங்களுடன் கூடிய நவீன சிப்பம் கட்டும் அமைப்பு மற்றும் சந்தை ஊக்குவிப்பு மையம்.
விழுப்புரம் மாவட்டம் - மேல்மலையனூர், வல்லம், செஞ்சி, கடலூர் மாவட்டம் - குமராட்சி, கீரப்பாளையம், காட்டுமன்னார்கோவில், கள்ளக்குறிச்சி மாவட்டம்- உளுந்தூர்பேட்டை, அரியலூர் மாவட்டம் - அரியலூர் ஆகிய இடங்களில் 22 கோடியே 58 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள், என மொத்தம் 62 கோடியே 42 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வேளாண்- உழவர் நலத்துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச்செயலாளர் உட்பட அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
மேலும் காண்க: