மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது அறுவடை செய்யப்படும் மார்கழி பட்ட நிலக்கடலையினை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
காவிரி கடைமடை மாவட்டம்
டெல்டா மாவட்டங்களில் காவிரி கடைமடை பகுதி மயிலாடுதுறை மாவட்டம். இங்கு சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. பிரதான பயிராக நெல் சாகுபடி செய்யப்பட்டாலும் நெல்லுக்கு அடுத்து கரும்பு, பருத்தி, வாழை, நிலக்கடலை, உளுந்து மற்றும் காய்கறிகள் போன்ற பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக நெல்லை நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது. அதுபோன்று பருத்தியும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மறைமுக ஏலம் விடப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
இந்நிலையில் தற்போது நிலக்கடலைக்கும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மறைமுக ஏலம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; மயிலாடுதுறை மாவட்டத்தில் மார்கழி பட்டத்தில் சுமார் 934.31 ஹெக்டேர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை துவங்கியுள்ளது.
நல்ல விலை கிடைக்க வாய்ப்பு
விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்திடும் பொருட்டு, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் விவசாயிகளின் நலன் கருதி, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, செம்பனார்கோயில் மற்றும் மாணிக்கப்பங்கு ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஏப்ரல் 02 -ம் தேதி முதல் மறைமுக ஏலம் நடத்த திட்டமிடப்பட்டு துவங்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள் பங்கேற்க உள்ளனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு போட்டி மிகுந்த சந்தை வாய்ப்பு கிடைத்து, விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் (e-NAM):
விளைபொருட்களை கொண்டுவரும் விவசாயிகள் தங்களது ஆதார் எண், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் வந்து மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் இணையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து, விரைவான மற்றும் பாதுகாப்பான பண பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்.
மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்
மேலும் விவசாயிகள் அனைவரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம் என அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் நலனுக்காக அரசின் பல்வேறு திட்டங்கள்
- உழவன் செயலி மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு சந்தை விலையை அறிந்து கொள்ளலாம்.
- விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் மற்றும் உரங்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.
- விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டம் மூலம் இழப்பீடு வழங்கப்படுகிறது.
- விவசாயிகளுக்கு கடன் உதவி மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
விவசாயிகளின் கோரிக்கைகள்
- விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் மற்றும் மின்சாரம் தடையின்றி கிடைக்க வேண்டும்.
- விவசாயிகளுக்கு தேவையான கடன் உதவிகள் எளிதாக கிடைக்க வேண்டும்.
- விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
- விவசாயிகளின் விளைபொருட்களை சேமிக்க தேவையான கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
Read more:
வெளுத்து வாங்க போகும் மழை எந்தெந்த மாவட்டங்களில் ? எப்பொழுது?