ராமநாதபுரத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தென்னை மற்றும் கரும்பு விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்தார் ஆட்சியர் விஷ்ணு சந்திரன்.
தென்னை விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டத்தில் வேளாண் விளை பொருள்களுக்கான வளாகம் கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும், கரும்பு விவசாயிகளுக்கு 3 லட்சம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உறுதியளித்துள்ளார்.
மாவட்டத்தில் 8,300 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருவதாக இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தெரிவித்தனர். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் விளைச்சல் குறைந்துள்ளது. இங்கு வியாபாரிகள் குறைந்த விலையில் தேங்காய் விற்பனை செய்வதால், விளைபொருட்களை வெளிச்சந்தையில் விற்க வேண்டியுள்ளது. உற்பத்தி மற்றும் தளவாடச் செலவுகள் அதிகரித்துள்ளதால் லாபம் மேலும் குறைந்துள்ளது. தேங்காயை சேமிப்பதற்கு தனி இடம் இருந்தால், எங்களால் நியாயமான விலைக்கு விற்க இயலும்,'' என விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் தென்னை மரங்களில் பூச்சி தாக்குதலை தடுக்க வேளாண் துறை உரிய நடவடிக்கை எடுக்கவும், சீரான பூச்சிக்கொல்லி மருந்துகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கோரிக்கைகளுக்கு பதிலளித்த ஆட்சியர் விஷ்ணு சந்திரன், வணிக வளாகம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். விவசாயிகளுக்கு சோலார் உலர்த்தி அமைக்க வேளாண் பொறியியல் துறை மூலம் 40% மானியம் வழங்கப்படுகிறது. தென்னையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை பதப்படுத்த விவசாயிகளும் முன்வர வேண்டும், என்றார்.
பின்னர், கரும்பு விவசாயிகளுடன் ஆட்சியர் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மாவட்டத்தில் பரமக்குடி மற்றும் கமுதி தொகுதிகளில் சுமார் 2,500 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு போதுமான கடன் வசதிகளை நேரடியாக வழங்கினால், அதிகளவு விவசாயிகள் கரும்பு பயிரிட முன்வருவார்கள் என விவசாயிகள் தெரிவித்தனர். அறுவடை காலங்களில் மான் மற்றும் காட்டுப்பன்றிகளால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த ஆட்சியர் விஷ்ணு சந்திரன் கூறியதாவது: கரும்பு விவசாயிகளுக்கு மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் நேரடியாக 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க சக்தி சுகர்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடப்படும் என்றார்.
"மான்கள் மற்றும் காட்டுப்பன்றிகளின் ஊடுருவலில் இருந்து விவசாயிகளின் பண்ணைகளை பாதுகாக்க மானிய விலையில் சோலார் ஸ்பைக் வேலிகளை நிறுவனம் வழங்குகிறது," என்று அவர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளிடம் தெரிவித்தார்.
இதையும் காண்க:
தீவிரமடைந்தது தென்மேற்கு பருவமழை- 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இனி கடன் கிடைப்பது ஈஸியா? விவசாயிகளுக்காக 3 புதிய முன்னெடுப்பு