வணிக பயன்பாட்டுக்கு உபயோகிக்கும் சிலிண்டர் விலை ரூ.268.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஹோட்டல் உணவுகளின் விலை கிடுகிடுவென அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. அதேநேரத்தில், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்த அறிவிப்பால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை, வீடுகளில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாடு சிலிண்டர் விலையை, மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதாவது ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை ரூ.268.50 உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம்,19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாடுள்ள இந்த சிலிண்டரின் விலை ரூ.2,406 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைஉயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருப்பதால் ஹோட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் இதன் தாக்கம், இனி ஹோட்டல் உணவுகளின் விலைஏற்றத்தால் சரி செய்யப்படும் எனத் தெரிகிறது. இதனால், ஹோட்டல் உணவை நம்பி உள்ளவர்களும், ஹோட்டல் உணவுப் ப்ரியர்களும் இனி தங்கள் உணவுக்காக அதிகப் பணம் செலவழிக்க நேரிடும் அபாயம் உருவாகியுள்ளது.
அதேநேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.965.50க்கே விற்பனை செய்யப்படுகிறது.இதனால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இதேபோல், பெட்ரோல் டீசல் விலையிலும் இன்று மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
தினமும் 3 டம்ளர் பால் மட்டும்- அதிகரித்தால் இத்தனைச் சிக்கல்கள்!
ஐஸ் வாட்டர் குடித்தால் இதயத் துடிப்பு குறையும்- நிபுணர்கள் எச்சரிக்கை!