தேசிய தலைநகர் டெல்லியில் 19 கிலோ வணிக திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர்களின் விலை ரூ.91.50 குறைக்கப்பட்டுள்ளது. விலைக்குறைப்பின் மூலம் 19 கிலோ வர்த்தக எல்பிஜி சிலிண்டர்கள் இப்போது ரூ.2,028-க்கு கிடைக்கும்.
இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர்களின் விலையினை அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டு ஒவ்வொரு மாதமும் மாற்றியமைக்கப்படுகின்றன. 2024 ஆம் நிதியாண்டின் முதல் நாளில் வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலை கிட்டத்தட்ட ₹92 குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உள்நாட்டு எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலை மாறாமல் கடந்த மாதம் விற்ற விலையிலேயே நீடிக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வணிக சிலிண்டரின் விலை- மாநிலம் வாரியாக (ரூபாய்) :
- டெல்லி ₹2028
- கொல்கத்தா ₹2132
- மும்பை ₹1980
- சென்னை ₹2192.50
வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களுடன் ஒப்பிடும்போது, வணிக எரிவாயுவின் விலைகள் அதிக அளவில் ஏற்ற இறக்கமாக இருக்கும். கடந்த ஆண்டு இதே மாதம் டெல்லியில் 19 கிலோ வணிக எரிவாயு சிலிண்டர் ₹2,253க்கு விற்பனை செய்யப்பட்டது. ஓராண்டில், தேசிய தலைநகரில் மட்டும் வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலை ₹225 குறைந்துள்ளது.
ஒவ்வொரு குடும்பமும் ஒரு வருடத்தில் தலா 14.2 கிலோ எடையுள்ள 12 சிலிண்டர்களை மானிய விலையில் பெற இயலும். PAHAL (எல்பிஜியின் நேரடி பயன் பரிமாற்றம்) திட்டத்தின் கீழ், நுகர்வோர் மானிய விலையில் எல்பிஜி சிலிண்டர்களைப் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில அரசு விதிக்கும் வரிகள் காரணமாக உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலைகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாறுபடுகிறது. எரிபொருள் விற்பனை நிலையங்கள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எல்பிஜி சிலிண்டர்களின் விலையை மாற்றியமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விலை நிர்ணயம் அந்நிய செலாவணி விகிதங்கள், கச்சா எண்ணெய் விலை போன்ற பல காரணிகளைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் குறிப்பிடுகின்றனர். வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லையென்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இல்லாத நிலையில் மாநில வாரியாக விலை நிலவரம் பின்வருமாறு- டெல்லியில் 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டரின் விலை ₹1103, மும்பையில் சிலிண்டரின் விலை ₹1102.5க்கு விற்கப்படுகிறது. கொல்கத்தாவில் ₹1129 ஆகவும், சென்னையில் ₹1118.50 ஆகவும் விற்கப்படுகிறது.
மார்ச் மாதம், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் 9.59 கோடி பயனாளிகள் ஒவ்வொரு 14.2 கிலோ எல்பிஜி எரிவாயு உருளைக்கும் ஆண்டுக்கு ₹200 மானியம் பெறுவார்கள் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
STAR அந்தஸ்து பெற்ற முதல் விவசாய கல்லூரிக்கு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கல் !