ஆசிரியராக வேண்டும் என்றக் கனவு சிலருக்கு இருக்கும். ஆனால் தற்போதையத் தேர்வு நடைமுறைகள் அந்தக் கனவை மிகவும் சவால்மிகுந்ததாக மாற்றிவிடுகிறது. அந்த வகையில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே, நேரடியாக பணி நியமனம் செய்யக்கோரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர் மொத்தம் 5861 ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடைபெற உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியிருக்கிறது.
சட்டம்
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அரசாணை 149
தமிழகத்தில் ஆரம்பத்தில் இந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் தகுதித் தேர்வு முதல்கட்ட தேர்வுதான் என்றும் இரண்டாவதாக அரசுப் பணிக்கு மற்றொரு போட்டித்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என அரசாணை 149 வெளியிடப்பட்டது.2018ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி இந்த அரசாணை வெளியானது.
போராட்டங்கள்
இந்த அரசாணை காரணமாக யாரும் எளிதில் வேலைக்கு செல்ல முடியாது என்றும், எனவே இந்த அரசாணையை ரத்து செய்துவிட்டு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே, நேரடியாக பணி நியமனம் செய்யக்கோரியும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
அரசாணை ரத்தாகுமா?
இதற்கிடையே கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில், இந்த அரசாணை 149 ரத்து செய்யப்படும் என கூறியிருந்தது. அதன்படி அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தற்போது வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அரசாணை ரத்து இல்லை என்பது தற்போது தெளிவாகி உள்ளது. நடப்பு ஆண்டில் பல்வேறு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள், காலி பணியிங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை கடந்த 5ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது.
போட்டித்தேர்வு
தற்போது தகுதித் தேர்வு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித் தேர்வு கட்டாயம் என்று 2018ம் ஆண்டு அரசாணை வெளியிட்டாலும்கூட அந்த தேர்வு இதுவரை நடைபெறவில்லை. முதல் முறையாக வரும் டிசம்பர் மாதம் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1874 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 3987 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 5861 பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடைபெற உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியிருக்கிறது.
மேலும் படிக்க...