தமிழகத்தில் புதிதாக தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ஆசிரியர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
ஊதிய உயர்வு
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுவது வழக்கம். இந்த பயிற்சி முடிவில், ஆசிரியர்கள் அதற்குரிய பின்னூட்டத்தை எழுதி தருவர். அதற்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். அதேசமயம் ஆண்டுதோறும் வழங்கப்படும் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வானது ஆசிரியர்களின் அனுபவத்திற்கு ஏற்ப வழக்கமான முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
தேர்ச்சி அவசியம்
இந்நிலையில் மாநிலத் திட்ட இயக்குநர் அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதன் முடிவில் கொள்குறி வகையிலான வினாத்தாள் அளிக்கப்படும்.இந்த தேர்வை ஆசிரியர்கள் எழுதி குறிப்பிட்ட மதிப்பெண்ணைப் பெற வேண்டியது கட்டாயம்.
அப்படி வெற்றி பெற்றால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு சான்றிதழ் பெறும் ஆசிரியர்களுக்கு மட்டுமே ஆண்டு இறுதியில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு ஆகியவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசின் இந்த அறிவிப்பிற்கு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறுகையில், மாநில திட்ட இயக்குநரின் சுற்றறிக்கையானது புதியக் கல்விக் கொள்கையைப் புறவாசல் வழியாக கொண்டு வர முயற்சிப்பதைப் போல் தெரிகிறது.
ஆசிரியர்கள் எதிர்ப்பு
இது ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் சான்றிதழ் பெறாத ஆசிரியர்களின் நிலை என்ன?
இத்தகைய திறன் மேம்பாட்டுப் பயிற்சியை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் முதல் அனைத்து துறை பணியாளர்களுக்கும் தமிழக அரசு நடத்துமா? என்று விளக்க முடியுமா? ஆசிரியர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இத்தகைய விஷயங்களை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
எல்லாக் கொரோனா வைரஸையும் தடுக்கும் ஒரேத் தடுப்பூசி!
தாமதமாக வந்த ஆசிரியர்கள் - தடாலடியாகக் கட்டாய விடுப்பு கொடுத்த CEO!