ஜப்பானை போன்று நிலத்தடி நீர் எடுப்பதை தீவிரமாக கண்காணிக்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம் பாதிப்பு மிகுந்த பகுதிகளில், வெள்ளத் தடுப்பு உத்திகள் மற்றும் நீர் மேலாண்மை திறன்களை மேம்படுத்துவதற்காக கடந்த மே 6-ம் தேதி மாநில நீர்வளத் துறை (WRD) அதிகாரிகள் ஜப்பான் சென்றனர். இந்த பயணத்திட்டத்தினை (Japan International Cooperation Agency- JICA) ஏற்பாடு செய்திருந்தது. மே 17-ம் தேதி சென்னை திரும்பிய அதிகாரிகள் சுற்றுப்பயணம் தொடர்பான விரிவான அறிக்கையை உருவாக்கி வருகின்றனர்.
ஒரு மூத்த WRD அதிகாரி முன்னணி நாளிதழ் ஒன்றிடம் கூறுகையில், “எங்கள் பயணத்தின் போது, நாங்கள் டோக்கியோ மற்றும் ஜப்பானில் உள்ள பிற நகரங்களுக்கு அவற்றின் நீர் மேலாண்மை நடைமுறைகளை ஆய்வு செய்ய சென்றோம். அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக சில நேரங்களில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்ட போதிலும், ஜப்பான் அரசாங்கம் வகுத்த கொள்கைகள் மற்றும் சட்டங்கள் மூலம் இந்த சிக்கல்களுக்கு வெற்றிகரமாக தீர்வு கண்டுள்ளது.
ஜப்பானின் முதன்மையான வெள்ளத் தடுப்பு அணுகுமுறையானது கீழ்நிலைப் பகுதிகளில் இருந்து நீரை இறைத்து பைப்லைன்கள் மூலம் கடலுக்குத் திருப்பி விடுவதாக அவர் கூறினார். "கூடுதலாக, டோக்கியோ நதிப் படுகைகளை இணைத்துள்ளது, இது மழைக்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது," என்றும் அவர் குறிப்பிட்டார்.
மற்றொரு அதிகாரி கூறுகையில், “ஜப்பானில் உள்ள தனியார் நிறுவனங்களும், அரசாங்கத் துறைகளும் தொழில்துறை நோக்கங்களுக்காக நுகர்வோருக்கு, குறிப்பாக வணிக அமைப்புகளில் உள்ள விவசாயிகளுக்கு குறைந்த விலையில் தண்ணீரை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் இத்தகைய நடைமுறைகள் குறைவு. தண்ணீரை இலவசமாக வழங்குகிறோம்.
கூடுதலாக, ஜப்பானிய அரசாங்கம் நீர் நுகர்வு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் அடிப்படையில் வரிகளை விதிக்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் தண்ணீர் தேவையை சிரமமின்றி சமாளிக்க முடிகிறது” என்றார்.
ஜப்பானில் நிலத்தடி நீர் எடுப்பது தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என்று அந்த அதிகாரி கூறினார். “தமிழக அரசும் இந்த விஷயத்தில் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், மேலும் முன்னேற்றத்திற்கான சில வாய்ப்புகள் இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் கிடைத்துள்ளது. திறமையான நீர் மேலாண்மைக்கான நிதியை தமிழகத்திற்கு வழங்குவதாக JICA உறுதி அளித்துள்ளது,'' என்றார்.
நிரந்தர வெள்ளத் தடுப்பு தீர்வை உருவாக்க, WRD ஏற்கனவே ஒரு தனியார் ஆலோசகரை நியமித்துள்ளது. இதேபோல், JICA வெள்ளம் தடுப்பு பற்றிய அறிக்கையைத் தொகுத்து வழங்கியதும் அதற்கேற்ப உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
pic courtesy: UN water
மேலும் காண்க:
குறுவை சாகுபடி- ஆடுதுறை நெல் ரகத்தை (ADT) விரும்பும் விவசாயிகள்