ஒமிக்ரான் பரவலுக்கு இடையேத் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 7000-ஐ நெருங்கியிருப்பது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் (Corona virus)
உலக நாடுகளை உலுக்கி எடுத்தக் கொரோனா இந்தியாவிலும் கோரத் தாண்டவம் ஆடியது. எனினும் மத்திய - மாநில அரசுகள் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் கட்டுக்குள் வந்துள்ளதே என சற்று ஆறுதல் அடைந்திருந்தோம்.
திடீர் அதிகரிப்பு (Sudden increase)
ஆனால் அதற்குள் ஒமிக்ரான் வைரஸ் என்றப் பெயரில் உருமாறியக் கொரோனா,அப்பாவி மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது.
கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது. முதலில் ஆயிரத்திற்குக் கீழே இருந்த தினசரி பாதிப்பு தற்போது ஆயிரங்களைக் கடந்து நிற்கிறது.
ஆகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வரும் நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
7000த்தை நெருங்கியது (Close to 7000)
அதன்படி, தமிழகத்தில் ஜனவரி 6ம் தேதி 1,28,736 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 6,983 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரிக் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 67 ஆயிரத்து 432 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 3,759 பேருக்கு ஜனவரி 6ம் தேதி தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது. செங்கல்பட்டில் 816 பேருக்கும், கோவையில் 309 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 185 பேருக்கும், திருவள்ளூரில் 444 பேருக்கும், வேலூரில் 223 பேருக்கும், தூத்துக்குடியில் 132 பேருக்கும், திருச்சியில் 123 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
11 பேர் பலி (11 people were killed)
அதேநேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 36,825 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 22,828 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க...